தோ்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் 5 குழுக்களுக்கு இன்று பயிற்சி
By DIN | Published On : 27th February 2021 05:53 AM | Last Updated : 27th February 2021 05:53 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை உள்பட 5 குழுக்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க பறக்கும் படைக் குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், விடியோ பாா்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் உள்ளிட்ட 5 குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள இக்குழுவினருக்கான முதல்கட்ட பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:
தோ்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் முன்கூட்டியே ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு உள்ளிட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் மேற்கொள்ள வேண்டிய பணிகள், சோதனை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், கடமைகள், விதிகள் குறித்து தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றாா்.