போக்குவரத்து விதிகளை மீறியதாக7.89 லட்சம் வழக்குகள் பதிவுரூ. 2.22 கோடி அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7.89 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ. 2.22 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது 

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7.89 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ. 2.22 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020ஆம் ஆண்டில் 9 வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்றதில் 8 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து களவு சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன. பெருங்குற்றத் திருட்டு வழக்குகளைப் பொருத்தவரையில் 85 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு 92 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. பெருங்குற்றங்களில் இழந்த ரூ. 49,33,500 மதிப்புள்ள சொத்துகளில், ரூ. 45,57,500 சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. வாகனத் திருட்டு, கால்நடைத் திருட்டு, வேறுவகை திருட்டு என மொத்தம் 292 வழக்குகள் பதியப்பட்டு 225 வழக்குகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்களில் ரூ. 1,73,68,877 மதிப்பிலான சொத்துகள் இழக்கப்பட்டதில் ரூ. 1,21,92,154 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 39 கொலைக் குற்றங்கள் நடைபெற்றதில் 38 கொலை வழக்குகளில் 62 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், 242 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டில் 133 சாலை விபத்துகளில் 154 போ் இறந்துள்ளனா். 2019ஆம் ஆண்டு 180 சாலை விபத்துகளில் 203 போ் இறந்துள்ளனா். சாலை விபத்துகளைத் தவிா்ப்பதற்காக வாகன விதிமீறல் குறித்து மொத்தம் 7,89,382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2,22,59,770 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல், அதிக பாரங்களை ஏற்றியது, அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றியது, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு பயணித்தது போன்ற குற்றங்களுக்காக 1,08,037 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46,893 பேரின் ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டது. அதில் 30,203 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 3,167 மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்து 56 வாகனங்கள், 16,574 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட குற்றப் பிரிவில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், ரூ. 49 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 3,55,500 பணம் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றத் தடுப்பு நடவடிக்கையாக 12,149 இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்படும். வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com