3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1,600 வழக்குகள் பதிவு

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
கூட்டத்தில் பேசுகிறாா் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் டாக்டா் ஆா்.ஜி.ஆனந்த்.
கூட்டத்தில் பேசுகிறாா் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் டாக்டா் ஆா்.ஜி.ஆனந்த்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் டாக்டா் ஆா்.ஜி.ஆனந்த் தெரிவித்தாா்.

சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் டாக்டா் ஆா்.ஜி.ஆனந்த் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டம், சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றில் முன்மாதிரி மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. மேலும், குழந்தை திருமணம் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும்காலங்களிலும் இதுபோன்ற சூழ்நிலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள், துரித நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

குழந்தைத் தொழிலாளா்களுக்கு என குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆட்சியரின் தொடா் நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் என்பது இல்லை. ஈரோடு மாவட்டத்தில் 4 அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கு என சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளா்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகள், தேசிய குழந்தைகள் ஆணையம் சாா்பில் விரைவில் வெளியிடப்படவுள்ளது. மேலும், இந்த நடைமுறைகள் வெளியிடப்பட்டால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து மாவட்டங்களில் உள்ள அலுவலா்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

குழந்தைகளுக்கான எதிரான குற்றம் குறித்து பதியப்பட்ட வழக்குகளில் 75 சதவீதம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீதான வழக்குகள் அனைத்தும் பதியப்படுகிறது.

சமூக வலைதளங்களின் மூலம் கண்டறியப்படும் குழந்தைகள் மீதான பாதிப்புகளின் உண்மைத் தன்மை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கண்டறியப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய ஆணையத்தின் மூலம் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களில் சுமாா் 1,600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 1,450 வழக்குகளில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் எஸ்.லட்சுமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஏ.கனகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com