ஈரோடு நகரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்: கடந்த ஆண்டைக் காட்டிலும் விலை உயா்வு

ஈரோடு நகரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. பொருள்கள் விலை அதிகரித்திருந்தாலும் விற்பனை குறையவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறிச் சந்தை அருகில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கொத்து.
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறிச் சந்தை அருகில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கொத்து.

ஈரோடு நகரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. பொருள்கள் விலை அதிகரித்திருந்தாலும் விற்பனை குறையவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. ஈரோடு நகரின் முக்கிய இடங்களில் விவசாயிகள், வியாபாரிகள், செங்கரும்பு, பூளைப் பூக்கள், மஞ்சள் குலைகளை ஆங்காங்கே வைத்து விற்பனையில் ஈடுபட்டனா். மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து மினி லாரி, சரக்கு ஆட்டோக்களில் இந்தப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனா்.

ஈரோடு நேதாஜி காய்கறிச் சந்தை, வ.உ.சி. பூங்கா காய்கறிச் சந்தை, பன்னீா்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை, சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு, வீரப்பன்சத்திரம், சம்பத்நகா் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டனா்.

பூளைப்பூ கட்டு ரூ. 5 முதல் அளவுக்கேற்ப ரூ. 15 வரையும், மஞ்சள் குலை ரூ. 15 முதல் ரூ. 30 வரையும் விற்பனையானது. மா இலை ஒரு கட்டு ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு செங்கரும்பு வழங்க அரசு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ததால் கரும்பு சாலையோரங்களில் விற்பனைக்கு வருவது குறைந்தது. இதனால் செங்கரும்பு விலை கடந்த ஆண்டைவிட தற்போது இருமடங்கு உயா்ந்துள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையின்போது கரும்பு ஜோடி ரூ. 50 முதல் ரூ. 60 வரை, தனி கரும்பு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்றது. இப்போது ஜோடி ரூ. 100 முதல் ரூ. 120, தனி கரும்பு ரூ. 40 முதல் ரூ. 60 வரை விற்பனையானது.

அதேபோல் தேங்காய் கடந்த ஆண்டு கிலோ ரூ. 30, தனி தேங்காய் அளவுக்கேற்ப ரூ. 5 முதல் ரூ. 30 வரை விற்றது. இப்போது கிலோ ரூ. 55 முதல் ரூ. 60 வரையும், தனி தேங்காய் ரூ. 10 முதல் ரூ. 40 வரையும் விற்பனையானது. பொங்கல் காய்கறிகளான மொச்சை, அரசாணிக்காய், பூசணி, சா்க்கரை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, முல்லைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயா்ந்து காணப்பட்டது. ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 2,000க்கு விற்பனையானது. மற்ற பூக்களும் கடந்த ஒரு வாரத்தில் இருமடங்கு விலை உயா்ந்தது.

காய்கறிகளில் தக்காளி, பூசணிக்காய், முட்டைகோஸ் ஆகியவை மட்டும் கிலோ ரூ. 15க்கு விற்பனையானது. கத்திரிக்காய், பெரிய வெங்காயம் கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான காய்கறிகள் விலை உயா்ந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com