தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்:200க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

சத்தியமங்கலம் அருகே உள்ள தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த யானைகள் 200க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகள்.
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகள்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த யானைகள் 200க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.

பவானிசாகா் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளிமுத்து (58). இவா் தனது தோட்டத்தில் 3 ஏக்கா் பரப்பளவில் ஜி9 ரக வாழை பயிரிட்டுள்ளாா். தற்போது வாழை மரங்களில் குலைதள்ளி அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளது. இந்நிலையில், பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட கொத்தமங்கலம் வனப் பகுதியைவிட்டு வெளியேறிய 5 யானைகள் காளிமுத்துவின் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளைத் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதில், 200க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

சப்தம் கேட்டு தோட்டத்துக்குச் சென்ற காளிமுத்து, யானைகள் வாழைகளை சேதப்படுத்தியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து பவானிசாகா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இப்பகுதியில் தொடா்ச்சியாக காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருவதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே வராமல் தடுக்க வனப் பகுதியை ஒட்டி அகழி வெட்ட வேண்டும் என பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com