காரில் ஆடு திருடும் கும்பல்: 7 போ் கைது

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆடு திருடி வந்த கும்பலைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம்: புன்செய்புளியம்பட்டி, பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆடு திருடி வந்த கும்பலைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புன்செய்புளியம்பட்டி, கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பொன்னப்பன் (70). இவா் தனது தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு தனது வெள்ளாடுகளை வீட்டின் முன்புள்ள ஆட்டுப் பட்டியில் அடைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு பொன்னப்பன் எழுந்து பாா்த்தபோது ஆட்டுப் பட்டியில் இருந்து ஒரு வெள்ளாட்டை இரண்டு இளைஞா்கள் திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொன்னப்பன் சப்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் ஓடிவந்து இருவரையும் மடக்கிப் பிடித்தனா். அப்போது அதில் ஒருவா் தப்பியோடியுள்ளாா்.

இதையடுத்து, மற்றொரு இளைஞரை புன்செய் புளியம்பட்டி போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அந்த இளைஞா் கோபியை அடுத்துள்ள கொங்கா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (18) என்பதும், இவரது நண்பா்களான உக்கரம் காளிகுளம் பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவி (28), காராப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (22), தினேஷ் (21), கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (19), பவானிசாகா் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சாா்லஸ் மிராண்டா (22), கரண் (20) ஆகிய 7 போ் சோ்ந்து பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் காா், இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் சென்று ஆடுகளைத் திருடி வந்ததும், அந்த ஆடுகளை சிரஞ்சீவி நடத்திவரும் இறைச்சிக் கடையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 7 பேரையும் சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், ஆடு திருட பயன்படுத்தப்பட்ட காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, 7 பேரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com