
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசுகிறார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி.
தமிழக மக்களின் போர் வீரனாக தில்லியில் செயல்படுவேன் என ஈரோட்டில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பேசியதாவது: தமிழக மக்களுடன் எனது குடும்பத்துக்கு மிக நீண்ட உறவு தொடர்வதால் இங்கு பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது அரசியல் உறவல்ல, குடும்ப உறவு. எனது பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ்காந்தி மூலம் கிடைத்த உறவாகும். நேரு குடும்ப பாரம்பரிய உறவை மேலும் வலுப்படுத்த வந்துள்ளேன்.
பிரதமர் மோடி, அவர் சார்ந்த பாஜக, அதன் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ். என அனைவரும் தமிழ் மொழி, பாரம்பரியம், வரலாற்றுக்கும் உரிய மரியாதை தர தவறிவிட்டனர். தமிழக மக்கள் விரும்பாததை அதிகாரத்தால் திணிக்க முயல்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழக மக்கள் யாருக்கும் அடி பணியாமல் வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் வரலாற்றை பிரதமர் படித்திருந்தால் இதனை அறிந்திருப்பார். இங்குள்ள மேடையில் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்கள் சிலையை பார்க்கிறேன்.
அவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தமிழ் மக்கள், தமிழ் உணர்வுக்காக போராடியதை மறக்க இயலாது. அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களது வழியை பின்பற்ற வேண்டும். பிரதமர் மோடி ஒரு கருத்து, ஒரு கலாசாரம், ஒரு மதம் என்ற கொள்களை புகுத்துகிறார். தமிழ் மொழியின் பழமையை அறியாமல் தேசத்தின் இரண்டாவது மொழியாக்குகிறார். அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. இந்நாடு பல மொழி, பல ஜாதி, பல மதத்துடன், பன்முகத்தன்மை கொண்டதை காண முடியும். நமது பன்முகத்தன்மைதான் நாட்டின் பலமாகும்.
ஓடாநிலையில் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
இன்றைய தில்லி, தமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயற்சிசெய்கிறது. நாட்டில் விவசாயம், விவசாயிகளை அழித்து, ஒழித்துவிட்டனர். அதனால், முதன்முறையாக தில்லி செங்கோட்டையில் இருந்து குடியரசு தினத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு பதில், விவசாயிகளின் பேரணி நடக்க உள்ளதை பார்க்கிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கரோனா கால சலுகைகள் போன்றவை விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோர், சாதாரண, அடித்தட்டு மக்களுக்கானதல்ல. மோடியின் 5 நண்பர்கள் மேலும் பணக்காரர்களாக வேண்டி எடுத்த நடவடிக்கையாகும்.
அந்த 5 பேருக்காக இந்திய அரசை மோடி நடத்துகிறார். படித்தவர்களுக்கு வேலையற்ற நிலையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நமது தொழிற்சாலைகள், பொருளாதாரம் போன்றவை ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பால் அழிந்துள்ளது. முதன்முறையாகஇந்திய எல்லைக்குள் பல ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா அனுப்பியுள்ளது. நமது நிலத்தை ஆக்கிரமித்து அவர்களது நிலமென கூறுகின்றனர். நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என கூறும் தைரியமற்றவராக மோடி உள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்வோர் நலனை காப்பதற்காக, நான் இங்கு வந்துள்ளேன்.
தமிழகத்தில் அதிமுகவை, தில்லி மிரட்டுவதுபோல, உங்களை யாரும் மிரட்ட முடியாத நிலையை உருவாக்க இப்போது வந்துள்ளேன். காந்தி கூறியதுபோல, வலிமையானவர்களுக்கு வலிமையானவர்களை எளிமையானவர்களுக்கு எளிமையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்த வந்துள்ளேன். தமிழக மக்களின் போர் வீரனாக தில்லியில் நான் செயல்படுவேன் என்றார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் ராகுல் காந்தி பேச்சை கேட்ட திரண்ட காங்கிரஸ் கட்சியினர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் ராகுல் காந்தி பேசியதாவது: இன்றைய இந்தியாவில், ஏழைகள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் மிகப்பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றால், இவர்களது வாழ்வாதாரம் மேலும் மோசமடைந்துவிட்டது. சராசரியான வருவாயை மக்கள் இழந்துவிட்டனர். படித்தவர்களுக்கு வேலை கொடுக்கும் தன்மையை தொழில் நிறுவனங்கள் இழந்துவிட்டன. நிறுவனங்களையே மூடிவிடும் நிலைக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நடத்துவோர் சென்றுவிட்டனர்.
தில்லி அரசின் போக்கிலேயே தமிழக அரசும் உள்ளதால் விரைவில் தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் யார் ஆட்சியை நடத்துகிறார்கள் என உங்களுக்கு தெரியும். தில்லியில் இருக்கும் மோடி இந்த அரசையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் செயல்படுத்த விரும்பும் திட்டங்களை, தமிழகத்தில் அதிமுக அரசு நிறைவேற்றுவதால் இந்த அரசை அகற்ற வேண்டும். தமிழக அரசு பாஜகவையும், பிரதமர் மோடியையும் சார்ந்தது அல்ல, தமிழக மக்களின் எண்ணங்களை சார்ந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.
தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக அவர் பெருந்துறையில் ராகுல்காந்தி பேசினார். தொடர்ந்து ஓடாநிலையில் தீரன்சின்னமலை நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த கைத்தறியில் துணி நெசவு செய்வதை பார்வையிட்டார். பிறகு அங்கு நெசவாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்றார்.
இந்த நிகழ்வுகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.