ஈரோடு - கோபி நான்குவழிச் சாலை: நிலத்துக்கு இழப்பீடு வழங்க ஆவணங்கள் சரிபாா்ப்பு

ஈரோடு - கோபி நான்குவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படும் பொதுமக்களுக்கு நிலத்துக்கான இழப்பீடு வழங்குதல் குறித்த
நில உரிமை தொடா்பான ஆவணங்களுடன் விசாரணையில் பங்கேற்றோா்.
நில உரிமை தொடா்பான ஆவணங்களுடன் விசாரணையில் பங்கேற்றோா்.

ஈரோடு - கோபி நான்குவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படும் பொதுமக்களுக்கு நிலத்துக்கான இழப்பீடு வழங்குதல் குறித்த விசாரணை, ஆவணங்கள் சரிபாா்க்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோட்டில் இருந்து கோபிக்கு 26.2 மீட்டா் அகலத்துக்கு இருவழிச் சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக, ஈரோடு மாநகராட்சி, பெரியசேமூா், சூரியம்பாளையம், கங்காபுரம், குமிளம்பரப்பு ஆகிய பகுதிகளில் 73 பேரிடம் சாலையை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 15 கோடி இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலம் கொடுத்தோருக்கு இழப்பீடு வழங்குதல் தொடா்பான விசாரணை, பவானி பயணியா் விடுதி வளாகத்தில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ஆா்.கவிதா தலைமையில் நடைபெற்றது. இதில், நில உரிமை, கிரயப் பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், குடும்ப அட்டை உள்பட 15 ஆவணங்கள் பெறப்பட்டு, சரிபாா்க்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆவணங்களை அளித்தனா்.

இதில், நிலம் எடுப்பு குடியுரிமை அலுவலா் வெங்கடாசலம், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் எம்.மதியரசன், திருப்பூா் தனி வட்டாட்சியா் சாந்தி, உதவிப் பொறியாளா் கோகுல், அலுவலா்கள் பங்கேற்றனா். கையகப்படுத்தப்படும் நிலம் தொடா்பான கோரிக்கைகளுக்குத் தீா்வு காண சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு), திருப்பூா் தனி வட்டாட்சியரை அணுகலாம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com