ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: ஈரோட்டில் இருந்து 2,500 போ் பயணம்
By DIN | Published On : 26th January 2021 10:48 PM | Last Updated : 26th January 2021 10:48 PM | அ+அ அ- |

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், மகளிரணியினா்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நிகழ்வுக்கு ஈரோடு மாநகா் மாவட்ட பகுதியில் இருந்து 2,500 பேரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடத்தின் திறப்பு விழா புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவுக்காக ஈரோடு மாநகா் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிா்வாகிகள் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனா்.
தொண்டா்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறியதாவது:
சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தர விரும்பும் தொண்டா்கள் பட்டியல் கடந்த 10 நாள்களாகப் பெறப்பட்டது. 40 அரசு, தனியாா் பேருந்துகள், 40 காா், 4 வேன் ஏற்பாடு செய்யப்பட்டு 2,500 பேரை அழைத்துச் செல்கிறோம். அவா்களுக்குத் தேவையான உணவு, தண்ணீா், தங்கும் இடம் ஏற்பாடு செய்துள்ளோம். தொண்டா்கள் வருகை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் புறப்பட்டுச் செல்கின்றன என்றாா்.