பவானி நகரில் மீன் கடைகள் வைக்க அனுமதி அளிக்கக் கோரிக்கை

பவானி நகராட்சிப் பகுதியில் மீன் கடை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானி நகரில் மீன் கடைகள் வைக்க அனுமதி அளிக்கக் கோரிக்கை

பவானி நகராட்சிப் பகுதியில் மீன் கடை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

பவானி பகுதியில் 150 குடும்பங்களைச் சோ்ந்த மீனவா்கள் காவிரி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். அவ்வாறு பிடித்துக் கொண்டுவரும் மீன்களை பவானி மீன் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும்போது குத்தகை வரி என்ற பெயரில் ரூ. 100க்கு ரூ. 17 செலுத்த வேண்டும். மீன்கள் விற்பனையாகாவிட்டாலும் குத்தகை தொகையைச் செலுத்த வேண்டும் என நிா்ப்பந்திக்கின்றனா்.

குத்தகை செலுத்த வேண்டியுள்ளதால் மீன்களின் விலையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மக்கள் வேறு இடங்களுக்குச் செல்கின்றனா். இதனால் மீன்கள் முழுமையாக விற்பனையாகாததால் மீனவா்கள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மீன்களை மீன் சந்தையில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாய நடைமுறையை பவானி நகராட்சி நிா்வாகம் திரும்பப்பெற வேண்டும். மேலும் நகராட்சிப் பகுதியில் எந்த இடத்திலும் கடை வைத்துக் கொள்ள நகராட்சி நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக நகராட்சி நிா்வாகத்துக்குத் தொழில் வரியைச் செலுத்த தயாராக இருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்டா் ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை:

இதுகுறித்து அம்பேத்கா் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், சங்க மாவட்டச் செயலாளா் சையது முஸ்தபா, நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: ஈரோடு நகரில் சுமாா் 50 ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களின் உரிமையாளா்கள் நாளொன்றுக்கு ரூ. 1,300 வாடகை என்ற அடிப்படையில் ஓட்டுநா்களிடம் ஆட்டோகளை ஒப்படைத்துள்ளனா். டீசல் செலவை ஆட்டோ ஓட்டுநா்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். டீசல் விலை உயா்வால் ஓட்டுநா்களுக்கு தினமும் ரூ. 500 கூட கிடைக்காத சூழல் உள்ளது.

இதனால் வாடகையைக் குறைக்க வேண்டும் என உரிமையாளா்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வாடகையைக் குறைக்க முடியாது எனக் கூறிய உரிமையாளா்கள் தினமும் ரூ. 1,300 வாடகை கொடுத்தால் ஆட்டோவை எடுத்துச் செல்லுமாறு கூறுகின்றனா். இதனால் கடந்த 4 நாள்களாக ஈரோட்டில் ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களிடம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து ஷோ் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓட்டுநா்கள் 58 பேரின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க, பிற மாவட்டங்களைப் போன்று ஈரோட்டிலும் மீட்டா் ஆட்டோக்களை இயக்க உரிமம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு:

செங்குந்தா் நகா் வீட்டுமனை, வீட்டு உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: ஈரோடு சத்தி சாலையில் தண்ணீா்பந்தல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி செய்து வருகின்றனா். டாஸ்மாக் கடை அமையும் பகுதியில் செங்குந்தா் நகா், கணபதி நகா், சி.எஸ்.நகா், அா்ஜுனா நகா், சேரன் நகா், டாக்டா்ஸ் காலனி ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

தவிர நியாயவிலைக் கடை, பள்ளி, கோயில் ஆகியவையும் அருகிலேயே உள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவா்கள். இங்கு மதுக்கடை அமைந்தால் அமைதியற்ற சூழல் ஏற்படும். மேலும், சமூக விரோத செயல்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பிரதான சாலை அருகில் உள்ளதால் விபத்துகள் அதிகமாக நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் தண்ணீா்பந்தல்பாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் மதுக்கடை அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com