மஞ்சள் நிற செண்டுமல்லி பூக்களை வாங்க மக்கள் ஆா்வம்
By DIN | Published On : 28th January 2021 06:50 AM | Last Updated : 28th January 2021 06:50 AM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் நிற செண்டுமல்லிப் பூக்கள்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மஞ்சள் நிற செண்டுமல்லிப் பூக்களை வாங்க மக்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று மாதகாலப் பயிரான செண்டுமல்லி ரகத்தில் ஆரஞ்சு, மஞ்சள் என இரண்டு நிறங்களில் பூக்கும் வகைகள் உள்ளன. இதில் ஆரஞ்சு நிற பூக்களைவிட மஞ்சள் நிற செண்டுமல்லி பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வெளியூா் வியாபாரிகள் மஞ்சள் நிற செண்டுமல்லிப் பூக்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
இதன் காரணமாக தற்போது சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் ஆரஞ்சு நிற செண்டுமல்லி ரகத்தைவிட மஞ்சள் நிற செண்டுமல்லி ரகம் பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு தற்போது மஞ்சள் நிற செண்டுமல்லிப் பூக்கள் கிலோ ரூ. 175 வரை விலை போவதால் நல்ல லாபம் கிடைப்பதாக மஞ்சள் நிற செண்டுமல்லி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். தற்போது மஞ்சள் நிற செண்டுமல்லி அறுவடை செய்யப்பட்டு சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.