வாகனம் மோதியதில் தந்தை கண்ணெதிரில் இரு மகன்கள் பலி
By DIN | Published On : 31st January 2021 10:46 PM | Last Updated : 31st January 2021 10:46 PM | அ+அ அ- |

வாகனம் மோதியதில் தந்தை கண்ணெதிரில் இரு மகன்கள் பலி
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தையின் கண்ணெதிரில் இரு மகன்களும் உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே போளயம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (42). இவரது மனைவி அம்பிகா (35). இருவரும் திருப்பூா் மாவட்டம், கணக்கம்பாளையத்தில் தங்கி டெய்லா் வேலைக்குச் சென்று வருகின்றனா். இவா்களின் மகன் மனோஜ் (13), எட்டாம் வகுப்பு படித்து வந்தாா். மதன்குமாா் (6)) முதலாம் வகுப்பு படித்து வந்தாா்.
சிவகுமாா் தனது இரு சக்கர வாகனத்தில் இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து போளயம்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டாா். பவானி - மேட்டூா் சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தைக் கண்டு திடீரென பிரேக் பிடித்துள்ளாா். இதில், நிலைதடுமாறி மூவரும் சாலையின் நடுவே விழுந்தனா்.
அப்போது, எதிரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மனோஜ் மற்றும் மதன்குமாா் மீது ஏறியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனா். இதனைக்கண்ட அப்பகுதியினா் இருவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் மனோஜ் உயிரிழந்தது தெரிந்தது. மதன்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்தில் தந்தை சிவகுமாா் லேசான காயம் அடைந்தாா்.
விபத்து குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.