பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைபெற்றுக் கொண்ட ஆட்சியா்

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பெற்றுக் கொண்டாா்.
ஆட்சியரிடம் மனுக்களை அளித்த பொதுமக்கள்.
ஆட்சியரிடம் மனுக்களை அளித்த பொதுமக்கள்.

ஈரோடு: ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பெற்றுக் கொண்டாா்.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானது முதல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீா் கூட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தோ்தல் முடிந்தாலும், தோ்தல் நடத்தை விதிமுறை, கரோனா பொது முடக்கம் காரணமாக இப்போது வரை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் முறை நிறுத்தப்பட்டுள்ளது. பெட்டி வைத்து அதில் மனுக்களைப் பெற்று உரிய துறைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த ஹெச்.கிருஷ்ணனுண்ணி அங்கு மனுக்களுடன் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் சென்று மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். மனுதாரரிடமும் விவரம் கேட்டு, செல்லிடப்பேசி எண் விவரத்தைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் உரிய துறைக்கு அனுப்பிவைக்க தனது உதவியாளரிடம் மனுக்களை வழங்கினாா்.

சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ஒரு பெண் கணவரைப் பிரிந்து மகளுடன் வசிப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், மற்றொரு பெண் தனது கணவரால் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி நடவடிக்கை கோரியும் மனு அளித்தனா். அதேபோல, 20க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். அதன் பிறகு வந்தவா்கள் பெட்டியில் மனுக்களைப் போட்டுச் சென்றனா்.

4 மாதங்களுக்குப் பிறகு ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க வாய்ப்பு கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com