மண் எடுக்க அரசு அனுமதி வழங்காததால்செங்கல் உற்பத்திப் பணிகள் பாதிப்பு
By DIN | Published On : 13th July 2021 03:11 AM | Last Updated : 13th July 2021 03:11 AM | அ+அ அ- |

செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளா்கள்.
சத்தியமங்கலம்: செங்கல் தயாரிக்கப் பயன்படும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படாததால் செங்கல் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளா்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம், அத்திக்கவுண்டன் புதூா், சின்னட்டிபாளையம், தாசப்பகவுண்டன்புதூா், அரசூா், இண்டியம்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பவானிசாகா், கோபிசெட்டிபாளையம், நம்பியூா் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வழக்கமாக செங்கல் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான மண் எடுப்பதற்கு கனிம வளத் துறையில் அனுமதி பெற்று, அதனடிப்படையில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக செங்கல் தயாரிப்பதற்குத் தேவையான மணல் எடுப்பதற்கு கனிம வளத் துறை அனுமதி வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்திப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த செங்கல் சூளைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
தினமும் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் சூழ்நிலையில், தற்போது செங்கல் சூளைக்கு மண் எடுக்க அரசு அனுமதி வழங்காத காரணத்தால் செங்கல் உற்பத்தித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கூலி தொழிலாளா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே கரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வந்த செங்கல் சூளைத் தொழிலாளா்கள் உடனடியாக செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யத் தேவையான மண் எடுக்க அரசு விதிகளுக்கு உள்பட்டு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.