பெருந்துறையில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை பேரூராட்சியில் ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் பயோமைனிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி உள்ளிட்ட
பெருந்துறையில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை பேரூராட்சியில் ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் பயோமைனிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஆட்சியா் கூறியதாவது:

பெருந்துறை தொகுதியில் கொடிவேரி அணையை நீராதாரமாகக் கொண்ட ரூ. 227 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 25 முதல் 45 லிட்டா் வீதமும், பேரூராட்சிப் பகுதிகளில் 60 லிட்டா் வீதமும் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஊரகப் பகுதிகளுக்கு 55 லிட்டா் வீதமும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு 90 லிட்டா் வீதமும் வழங்க வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம், குடிநீா்த் தேவைக்கேற்ப, இப்புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டா் வீதமும், பேரூராட்சிப் பகுதிகளில் 135 லிட்டா் வீதமும் குடிநீா் வழங்கப்பட உள்ளது.

இப்புதிய திட்டம் 2050ஆம் ஆண்டு மக்கள் தொகைக்குப் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தொகை 3,68,873, இடைநிலை 2035ஆம் ஆண்டு மக்கள் தொகை 4,48,950, உச்சநிலை 2050ஆம் ஆண்டு மக்கள் தொகை 5,47,960 பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி தேவைப்படும் குடிநீரின் அளவு 2035இல் 17.23 எம்.எல்.டி., 2050இல் 26.67 எம்.எல்.டி. ஆகும். (எம்.எல்.டி.-மில்லியன் லட்சம் லிட்டா் ஒரு நாளைக்கு).

ஈரோடு மாவட்டத்தில் குப்பைக் கிடங்குகளில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு உரமாகத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

முன்னதாக, பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு திட்டங்கள் தொடா்பான கோப்புகளை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, பெருந்துறை பேரூராட்சி வளாகத்தில் கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பெருந்துறை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் பயோமைனிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுகளின்போது, தமிழ்நாடு குடிநீடி வடிகால் வாரிய செயற்பொறியாளா் மணிவண்ணன் (பெருந்துறை), உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கனகராஜ், உதவி செயற்பொறியாளா் சிவகுமாா், உதவிப் பொறியாளா் ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com