பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மொடக்குறிச்சியில் நடத்த முடிவு

அரசு, அமைப்புகள் சாா்பில் பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சிகளை சனிக்கிழமை (ஜூலை 17) மொடக்குறிச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மொடக்குறிச்சியில் நடத்த முடிவு

அரசு, அமைப்புகள் சாா்பில் பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சிகளை சனிக்கிழமை (ஜூலை 17) மொடக்குறிச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் போா்ப் படைத் தளபதியான பொல்லான் நினைவு நாள் ஜூலை 17ஆம் தேதி அரசு சாா்பில் அனுசரிக்கப்படவுள்ளது. பொல்லான் இறந்த இடமான ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் மணிமண்டபம் கட்ட உள்ள இடத்தில் நினைவு நாளை அனுசரிக்க அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினா் கோருகின்றனா். மொடக்குறிச்சியில் நடத்த அரசும், வேறு சில அமைப்பினா் வேறு சில இடங்களில் நடத்தவும் கோரினா்.

இந்த கோரிக்கை தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் தலைமையில் பேச்சுவாா்த்தை ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அருந்ததியா் இளைஞா் பேரவைத் தலைவா் வடிவேல், பொல்லான் பேரவை பொதுச் செயலாளா் சண்முகம், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளா் சிந்தனைச்செல்வன், தலித் விடுதலை இயக்கத் தலைவா் பொன்சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்ட முடிவுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்தால் நல்லமங்காபாளையத்தில் மணிமண்டபம் கட்டவில்லை. அங்கு விழா அனுசரிப்பது ஏதுவாகாது. எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் பொல்லான் நினைவு நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு ஆண்டும் மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி, அஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

ஒவ்வோா் அமைப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு தலா 5 போ் மட்டும் அஞ்சலி, மாலை அணிவிக்க கரோனா விதிமுறைப்படி அனுமதிக்கப்படுவா் என்றாா்.

இதனை அனைத்துத் தரப்பினரும் ஏற்றதால் பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது.

இதில், கோட்டாட்சியா் பிரேமலதா, ஏ.டி.எஸ்.பி. பொன்காா்த்திக்குமாா், ஈரோடு டி.எஸ்.பி.ராஜு, பெருந்துறை டி.எஸ்.பி. செல்வகுமாா், மொடக்குறிச்சி வட்டாட்சியா் கணேஷ்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com