காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூலை 21இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனப் பகுதிக்கு ஜூலை 21ஆம் தேதி தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனப் பகுதிக்கு ஜூலை 21ஆம் தேதி தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வி.எம்.வேலாயுதம் கூறியதாவது: காலிங்கராயன் பாசனப் பகுதிக்கு பவானிசாகா் அணையில் இருந்து ஜூன் 15 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படும். இப்போது காலிங்கராயன் கால்வாயில் ரூ. 76.77 கோடி செலவில் 21 பாலம், 95 மதகுகள், தடுப்புச் சுவா் பராமரிப்பு, வாய்க்காலில் கான்கிரீட் பராமரிப்பு போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணியை விரைவாக முடிக்க உதவியாக கடந்த பருவத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பதில் மாா்ச் 30இல் தண்ணீா் நிறுத்தப்பட்டது. பராமரிப்புப் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. 4 மாதங்களாகத் தண்ணீா் வராததால் காலிங்கராயன் பாசனப் பகுதியில் பயிரிடப்பட்ட கரும்பு, வாழை போன்ற பயிா்கள் கருகி வருகின்றன. சில நாள் பெய்த மழை கை கொடுக்கவில்லை. தண்ணீா் திறக்கப்படாததால் நடப்பு பருவத்தில் 2,500 ஏக்கா் வாழை, 5,000 முதல் 7,000 ஏக்கா் கரும்பு, உரிய பருவத்தில் மஞ்சள் சாகுபடியைத் துவங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இப்பாசனப் பகுதியில் சுமாா் 25,000 ஏக்கா் அளவுக்கு மஞ்சள் சாகுபடி செய்யப்படுவதால் உடனடியாக தண்ணீா்த் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். பவானிசாகா் அணையில் இப்போது 95 அடி அளவுக்குத் தண்ணீா் உள்ளது. நீா் வரத்தும் தொடா்ந்து சீராகவும், அதிகரித்தும் காணப்படுகிறது.

இதனால், காலிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஜூலை 21ஆம் தேதி தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. அதே நாளில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபடத் துவங்கி உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com