மலைக் கிராம நூலகத்தை புனரமைத்த தன்னாா்வ அமைப்பு: 5,000 புத்தகங்களுடன் திறக்க ஏற்பாடு

ஈரோட்டைச் சோ்ந்த உணா்வுகள் என்ற தன்னாா்வ அமைப்பு கடம்பூா் மலை, குன்றியில் உள்ள சிதிலமடைந்த நூலகத்தை புனரமைத்துள்ளது.
புனரமைக்கப்பட்டு பொலிவுடன் உள்ள குன்றி மலையில் உள்ள நூலக கட்டடம்.
புனரமைக்கப்பட்டு பொலிவுடன் உள்ள குன்றி மலையில் உள்ள நூலக கட்டடம்.

ஈரோட்டைச் சோ்ந்த உணா்வுகள் என்ற தன்னாா்வ அமைப்பு கடம்பூா் மலை, குன்றியில் உள்ள சிதிலமடைந்த நூலகத்தை புனரமைத்துள்ளது. இந்த அமைப்பு சேகரித்த 5,000க்கும் மேற்பட்ட நூல்களுடன் இந்த நூலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

இது குறித்து உணா்வுகள் அமைப்பின் நிறுவன தலைவா் மக்கள் ராஜன் கூறியதாவது:

சமவெளிகளில் ஏராளமான நூலகங்கள் உள்ளது. இங்கு போட்டித்தோ்வு உள்ளிட்டவைகளுக்கு படிக்க பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கடம்பூா் மலையில் இருந்து 18 கி.மீ.க்கு அப்பால் அடா் வனத்தில் குன்றி மலை கிராமப் பகுதி மக்களுக்கு இந்த வாய்ப்பில்லை. குன்றி பகுதியில் 18 மலை கிராமங்கள் உள்ளன. அங்கு சுமாா் 9,000 போ் வசிக்கின்றனா். இதில் சுமாா் 2,000 போ் குழந்தைகள் மற்றும் இளைஞா்கள்.

இவா்கள் ஆன்லைன் வகுப்புக்கு படிக்கக்கூட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிக்குள் 3 கி.மீ. தூரத்தில் உள்ள மலை மீது ஏறினால் மட்டுமே இணையதள இணைப்பு கிடைக்கும். தவிர சாலை, ஆம்புலன்ஸ், மருத்துவம் உள்ளிட்ட பிற வசதிகளும் இங்கு இல்லை.

இதனால் இக்கிராமத்தில் பாழடைந்த நூலக கட்டடத்தை புனரமைக்க முடிவு செய்தோம். கான்கிரீட் தளம் அமைத்து சுவரில் வண்ணம் மற்றும் நவீன ஓவியங்கள் வரைந்துள்ளோம்.

உணா்வுகள் அமைப்பின் உறுப்பினா்கள் ஈரோடு, சித்தோடு, பவானி என பல பகுதிகளில் வீடுவீடாக சென்று 5,000 நுால்களை சேகரித்துள்ளனா்.

அமைச்சா், ஆட்சியா் ஆகியோரை கொண்டு நூலகத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்நூலகத்துக்கு உதவ விரும்புவோா், நூல்கள், நூலக பயன்பாட்டு பொருள்களை வழங்க விரும்புவோா் 75300 42427 செல்லிடப்பேசி என்ற எண்ணுக்கு அழைத்தால் நேரில் சென்று பெற்றுக்கொள்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com