ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்: ரூ.62 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 15,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 15,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஜூன் 14ஆம் தேதி வரை தளா்வுகளுடன் முழு பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்திருந்தாா்.

இதன்படி ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

எல்லைப் பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் முழு பொதுமுடக்கத்தை பொருட்படுத்தாமல் வழக்கம்போல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோா் சுற்றி வருகின்றனா். விதிகளை மீறும் நபா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். மேலும் இ-பதிவு இன்றி வெளியே சுற்றுபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதுதவிர தேவையின்றி வெளியில் சுற்றும் நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுகிறது. இதுவரை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக 15,000க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ 62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்க உத்தரவை மதித்து பொது மக்கள் வீட்டில் இருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியில் வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com