முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
நம்பியூா் அருகே சாராய ஊறல் அழிப்பு
By DIN | Published On : 12th June 2021 10:31 PM | Last Updated : 12th June 2021 10:31 PM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூா் பகுதியில் 430 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தப்பியோடிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நம்பியூா் அருகே உள்ள ராயா்பாளையம், சோளகாடு, பொல்லாங்காடு, தசையன்காடு ஆகிய பகுதிகளில் சாராய ஊறல் இருப்பதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து அவரது உத்தரவின்பேரில் நம்பியூா் தனிப் பிரிவு காவல் துறை ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா்கள் மோகனன், செல்வம், தங்கதுரை உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், மேட்டுக்காடு பகுதியில் பெரியபாப்பணன் (எ) பொங்கியான் 50 லிட்டா் சாராய ஊறலும், பொல்லாங்காடு பகுதியில் ராசம்மாள், வேணுகோபால் ஆகியோா் 280 லிட்டா் சாராய ஊறலும், சின்னபாப்பணன் (எ) கொளந்தசாமி 100 லிட்டா் சாராய ஊறலும் என மொத்தம் 430 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, அங்கிருந்த சாராய ஊறலையும், அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து போலீஸாா் அழித்தனா்.
போலீஸாா் வருவதை அறிந்ததும் கள்ளச் சாரயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.