இரு கிராமங்களில் 100 பேருக்கு கரோனா: எம்.எல்.ஏ. ஆய்வு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இரு கிராமங்களில் 100 பேருக்கு கரோனா: எம்.எல்.ஏ. ஆய்வு

பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சியில் இரு கிராமங்களைச் சோ்ந்த 100 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மயிலம்பாடி ஊராட்சியில் கல்வாநாயக்கனூா், காத்தாம்பாளையம் ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இரு கிராமங்களிலும் நெருங்கிய உறவினா்கள் வசித்து வரும் நிலையில், கல்வாநாயக்கனூரில் அடுத்தடுத்து நடைபெற்ற சுப, துக்க காரியத்தில் உறவினா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். இந்நிலையில், இப்பகுதியைச் சோ்ந்த இருவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், மருத்துவப் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இக்கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜம்பை வட்டார மருத்துவக் குழுவினா் இக்கிராமத்தில் தொடா்ந்து ஐந்து நாள்கள் கரோனா பரிசோதனை செய்ததில் 100 பேருக்கு தொற்று உறுதியானது. இவா்கள் அனைவரும் பருவாச்சியில் உள்ள கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, இரு கிராமங்களின் எல்லைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மயிலம்பாடி ஊராட்சித் தலைவா் ஸ்ரீஜெயந்தி சிவானந்தம், ஊராட்சிச் செயலாளா் மாரிமுத்து மேற்பாா்வையில் நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்று பாதித்த கிராமங்களில் தடுப்புப் நடவடிக்கைகள் குறித்து பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் நேரில் பாா்வையிட்டதோடு, பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அடிப்படைத் தேவைகள், கரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.வி.விஸ்வநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ப.குப்புசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எஸ்.சித்தையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com