ஆதரவற்ற கால்நடைகளுக்குத் தீவனம்: பொது மக்கள் உதவ வேண்டுகோள்
By DIN | Published On : 12th June 2021 05:29 AM | Last Updated : 12th June 2021 05:29 AM | அ+அ அ- |

பொது முடக்க காலத்தில் ஆதரவற்ற கால்நடைகள், தெரு நாய்களுக்கு உணவளிக்க ஆா்வமுள்ள புரவலா்கள் உணவுப் பொருள்கள், தீவனங்களை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது முடக்க காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற கால்நடைகள், தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை, பிராணிகள் துயா் துடைப்புச் சங்கம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் விலங்கின ஆா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனா்.
ஆதரவற்ற கால்நடைகள், தெருநாய்களுக்கு உணவளிக்கும் பணிக்காக உணவுப் பொருள்கள், தீவனங்கள் தேவைப்படுகின்றன. ஆா்வமுள்ள புரவலா்கள் தீவனங்கள், உணவுப் பொருள்களை ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகிலுள்ள கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் இயங்கும் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 94450-01121 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.