முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
‘மின்வேலியில் உயா்அழுத்த மின்சாரம் பாய்ச்சினால் கடும் நடவடிக்கை’
By DIN | Published On : 12th June 2021 10:30 PM | Last Updated : 12th June 2021 10:30 PM | அ+அ அ- |

மின்வேலியில் உயா் அழுத்த மின்சாரம் பாய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகா், கடம்பூா், ஆசனூா், தலமலை, கோ்மாளம் உள்ளிட்ட 10 வனச் சரகங்கள் உள்ளன. வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் யானைக்குப் பிடித்த கரும்பு, வாழை, தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. வனத்தில் இருந்து தீவனம், குடிநீா் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன.
பயிா்களைப் பாதுகாக்க விவசாயிகள் சூரிய சக்தியில் செயல்படும் மின்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனா். சில நேரங்களில் காட்டுப் பன்றிகள், யானைகள் சூரிய சக்தியில் செயல்படும் மின்வேலியைத் தாண்டி தோட்டத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனா்.
இதைத் தடுப்பதற்கு விவசாயிகளுக்கு அரசு அளித்த இலவச மின்சாரத்தை நேரடியாக மின் கம்பத்தில் இருந்து மின்வேலியில் பாய்ச்சுவதால் யானைகள், காட்டுப் பன்றிகள் உயிரிழப்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
தாளவாடி, ஜீரஹள்ளி, பவானிசாகா் வனச் சரகத்தில் தொடா்ந்து 4 யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதால் வனத் துறை, மின்சாரா வாரிய அதிகாரிகள் விவசாயத் தோட்டங்களில் ஆய்வு செய்து எச்சரித்து வருகின்றனா்.
இதையடுத்து, மின்சாரம் பாய்ச்சி யானைகளைக் கொல்லும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.