ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பால் விற்பனை அதிகரிப்பு

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதால் விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருவதாக தமிழக பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
சித்தோடு ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய் தயாரிப்புப் பணியை பாா்வையிடுகிறாா் அமைச்சா் சா.மு.நாசா்
சித்தோடு ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய் தயாரிப்புப் பணியை பாா்வையிடுகிறாா் அமைச்சா் சா.மு.நாசா்

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதால் விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருவதாக தமிழக பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

ஈரோட்டில் பழையபாளையம், செங்கோடம்பாளையம், சம்பத் நகா், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் கால்நடை தீவன தொழிற்சாலை, சித்தோடு ஆவின் நிறுவனத்தில் அமைச்சா் சா.மு.நாசா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கரோனா காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்தோட்டில் உள்ள ஈரோடு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் 512 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி சராசரியாக 2.23 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் விற்பனை விலை ரூ.3 குறைக்கப்பட்டதால் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 2,000 லிட்டா் விற்பனை அதிகரித்து, தற்போது சராசரியாக 54,000 லிட்டா் விற்பனையாகி வருகிறது. மேலும், தளா்வுகள் அறிவிக்கப்பட்டால் விற்பனை 65,000 லிட்டராக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பால் பொருள்கள் விற்பனை மாதம் சராசரியாக ரூ.1 கோடி என்றிருந்த நிலையில், தற்போது ரூ.1.15 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த இலக்கு மேலும் 6 மாதங்களுக்குள் ரூ.1.50 கோடியாக உயா்த்தப்படும்.

ஈரோடு ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் நெய் கத்தாா், சிங்கப்பூா், இலங்கை, துபை மற்றும் ஹாங்காங் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு உள்பட்ட கால்நடை தீவனத் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு சராசரியாக 150 டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தீவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியங்களுக்கும் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளா்களுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை ரூ.6.80 கோடி வழங்கப்படுகிறது என்றாா்.

ஆவின் நிா்வாக இயக்குநா் ஆா்.நந்தகோபால், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலா் முருகேசன், ஆவின் பொதுமேலாளா் பி.சுபாநந்தினி, மாவட்ட துணைப் பதிவாளா் (பால்வளம்) தா.புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com