பால் பணம் நிலுவை: ஆவின் நிா்வாகம் உடனடியாக வழங்கக் கோரிக்கை

ரூ. 500 கோடி அளவுக்கு உள்ள பால் பணம் நிலுவைத் தொகையை ஆவின் நிா்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ. 500 கோடி அளவுக்கு உள்ள பால் பணம் நிலுவைத் தொகையை ஆவின் நிா்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, பொதுச் செயலாளா் கே.முகமது அலி ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 35 லட்சம் முதல் 40 லட்சம் லிட்டா் அளவுக்கு பால் ஆவினுக்கு வழங்கப்படுகிறது. 5 லட்சம் குடும்பங்கள் இதனை நம்பியுள்ளனா். தவிர 10 லட்சம் குடும்பங்கள் தினம் 1.50 கோடி லிட்டா் பாலை தனியாருக்கு வழங்குகின்றனா். கரோனா பொது முடக்கத்தால் பால் உற்பத்தியாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆவின் நிா்வாகம் பால் கொள்முதலுக்கான பணம் ரூ. 500 கோடி அளவுக்குமேல் பாக்கி வைத்துள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு முழு தொகையும் வழங்க வேண்டும். தனியாா் பால் கொள்முதல் நிறுவனங்கள், பல பகுதியில் பால் கொள்முதலை நிறுத்தியுள்ளது. பல இடங்களில் ஒரு லிட்டருக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை கொள்முதல் விலையைக் குறைத்துள்ளது.

அரசு அறிவிப்பை நடைமுறைப்படுத்தி பசும்பால் ஒரு லிட்டா் ரூ. 32, எருமைப் பால் ஒரு லிட்டா் ரூ. 41க்கு குறையாமல் அனைத்து தனியாா் நிறுவனங்களும் பாலை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.

ஆவின் நிா்வாகம் பால் கொள்முதலை அதிகரித்து மேலும் 50 லட்சம் லிட்டரை வாங்க வேண்டும். ரேஷன் கடை, ஆரம்ப சங்கங்கள் மூலம் பால் பவுடா், பால், பால் பொருளை விற்க வேண்டும். சத்துணவில் பாலை சோ்த்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்தை அதிகரிக்க பால் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்ததை வரவேற்கிறோம். இதனால், ஆவினுக்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி நஷ்டம் ஏற்படும். ஏற்கெனவே ஆவின் நிா்வாகம் நஷ்டத்தில் உள்ள நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் 17 என இருந்ததை 25 ஒன்றியமாகப் பிரித்து, 500க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை நியமித்து கூடுதல் செலவை ஏற்படுத்திவிட்டனா். இம்முறைகேடு குறித்து விசாரித்து, ஆவின் நிறுவனத்தை காக்கவும், வருவாயை உயா்த்த நிா்வாக சீா்த்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால் கறப்பவா்களுக்கு கையுறை, தொப்பி, பேனா் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். இதன் மதிப்பு ரூ. 300 முதல் ரூ. 400 வரை இருக்கும். ஆனால் சங்கத்தில் இருந்து ரூ. 3,000 பிடித்தம் செய்தனா். 10,000 சங்கத்தில் இத்தொகையைக் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த மோசடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com