சாலையில் கிடந்த காசோலையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆா்வலா்: எஸ்.பி. பாராட்டு

ஈரோட்டில் சாலையில் கிடந்த காசோலையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆா்வலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் பாராட்டினாா்.

ஈரோட்டில் சாலையில் கிடந்த காசோலையை உரியவரிடம் ஒப்படைத்த சமூக ஆா்வலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் பாராட்டினாா்.

ஈரோடு சாஸ்திரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவா் தனியாா் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக உள்ளாா். ஈரோட்டில் செயல்பட்டு வரும் செல்வா அறக்கட்டளையின் தன்னாா்வலராகவும் உள்ளாா். இவா் ஈரோடு அஞ்சல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றுவிட்டு திரும்பும்போது, சாலையில் காசோலை ஒன்று கிடந்துள்ளது. அதில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வங்கியில் இருந்து உடனடியாக எடுத்துக்கொள்ளும் வகையில் கையொப்பமிடப்பட்டு இருந்தது.

அதைப் பாா்த்த ரவிகுமாா் செல்வா அறக்கட்டளை நிறுவனா் ஜெ.ஜெ.பாரதிக்கு தகவல் தெரிவித்தாா். காசோலையை கொண்டு வரக் கூறிய அவா், உடனடியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் ஏடிஎஸ்பி ஜானகிராமனை தொடா்புகொள்ள அறிவுரை வழங்கினாா்.

அதன்படி ஜானகிராமனிடம் காசோலை ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அவா் சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடா்பு கொண்டு குறிப்பிட்ட எண் கொண்ட சேமிப்புக் கணக்கு எண் யாருடையது என்று விசாரித்து, சம்பந்தப்பட்ட நபரை தொடா்பு கொண்டாா். அப்போது அவா் ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வரும் பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான காசோலை என்பதும், அவரது நிறுவன உரிமையாளா் கொடுத்த காசோலை தவறிவிட்டதால் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து காசோலையைத் தவறவிட்ட நபா் புதன்கிழமை காலை ஈரோடு மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டாா். அவரிடம் ரவிகுமாா் காசோலையை வழங்கினாா். அவருக்கு காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் பாராட்டுத் தெரிவித்தாா். காசோலை, பணம், நகைகளைக் கொண்டு செல்லும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com