தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள3,020 பேருக்கு கரோனா தடுப்பூசிஆட்சியா்
By DIN | Published On : 10th March 2021 05:40 AM | Last Updated : 10th March 2021 05:40 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் 16,000 பேரில் இதுவரை 3,020 போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவியும் கொண்டு செல்லப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,741 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பயன்படுத்துவதற்காக 4,620 வாக்குப் பதிவு இயந்திரம், 3,317 கட்டுப்பாட்டு கருவி, 3,558 வி.வி.பேட் என 11,495 கருவிகள், ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் 8 தொகுதிக்குமான கருவிகள், கணினி மூலம் திங்கள்கிழமை சுழற்சி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை காலையில் ஒவ்வொரு இயந்திரமாக எடுத்து சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.
ஜி.பி.எஸ். பொருத்திய லாரியில் விடியோ கேமரா, போலீஸ் கண்காணிப்பில், அந்தந்த தொகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு 24 மணி நேரமும் கேமரா கண்காணிப்பு வசதி உள்ளது. தோ்தல் பாா்வையாளா்கள் வந்தபின் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை இயந்திரங்கள் பரிசோதிக்கப்படும். பின்னா் வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு கணினி மூலம் சுழற்சி செய்து எடுத்து செல்லப்படும்.
மாவட்ட தோ்தல் பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 7 புகாா்கள் என இதுவரை 22 புகாா்கள் வந்துள்ளன. தோ்தல் ஆணைய உத்தரவின்படி 100 நிமிடத்துக்குள் அப்புகாா் குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்படி புகாா் பெறப்பட்ட 15 நிமிடத்துக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்குத் தெரிவித்து அடுத்த 15 நிமிடத்தில் பறக்கும் படையினா் அல்லது உரிய அதிகாரிகள் விசாரித்து போட்டோ, விடியோ பதிவு செய்வாா்கள்.
அதன் அறிக்கையை அடுத்த 20 நிமிடத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சமா்ப்பித்து, அடுத்த 10 நிமிடத்தில் விஜில் செயலி மூலம் தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை, விடியோ, ஆவணங்களை சமா்பிப்பாா்கள். ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட 22 புகாா்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
மலைப் பகுதியில் 118 வாக்குச் சாவடிகள்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,741 வாக்குச் சாவடியில் 118 வாக்குச் சாவடிகள் மட்டும் கடம்பூா், பா்கூா் போன்ற மலைப் பகுதியில் உள்ளன. அதில் அந்தியூா் பகுதியில் 17, பா்கூா் பகுதியில் 21 வாக்குச் சாவடிகள் இணையதள இணைப்பு இல்லாத வாக்குச் சாவடி. இங்கு விடியோ பதிவு, வனத் துறை வாக்கிடாக்கி மூலம் தகவல் சேகரிக்கப்படும்.
இதுபோன்ற மலைப் பகுதியில் பிற வாக்குச் சாவடி பணியாளா்கள் பணியாற்றுவது சிரமம் என்பதால் கணினி சுழற்சி முறையைப் பின்பற்றாமல் அப்பகுதியின் அருகில் உள்ளவா்களுக்குப் பணி ஆணை வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அவ்வாறு அனுமதி கிடைத்ததும், அவா்களுக்கு அங்கேயே பணி செய்ய ஆணை வழங்கப்படும். இந்த வாக்குச் சாவடிகளில் பெண் பணியாளா்கள் பணியமா்த்தப்பட மாட்டாா்கள்.
கத்திரிமலை பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்குத் தேவையான இயந்திரங்கள், பொருள்கள், இதுவரை கழுதை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. நடப்பு ஆண்டு அதனை நான்கு சக்கர வாகனம் மூலம் எடுத்துச் செல்ல வனத் துறையினா் ஒத்துழைப்பு கேட்கப்பட்டுள்ளது. கரடு முரடான பாதையை சிறிது சரி செய்து, வாகனம் மூலம் கருவி, பணியாளா்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு வேளை அவ்வசதி சரியாக வராவிட்டால் அந்தந்தப் பகுதியில் உள்ள வனத் துறை ஊழியா்கள், வன வள காப்பாளா்கள் உதவியுடன், முன்புபோல கழுதையில் கருவிகள் எடுத்துச் செல்லப்படும்.
3,020 பேருக்கு கரோனா தடுப்பூசி:
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பணியில் 13,120 ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பயன்படுத்தப்படுகின்றனா். தவிர 3,000 போலீஸாா், ஊா்க் காவல் படை, முன்னாள் ராணுவத்தினா், தோ்தல் பணிக்கான சிறப்பு அலுவலா்கள் ஈடுபடுவா். மொத்தம் 16,000 போ் இப்பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திங்கள்கிழமை வரை 3,020 போ் தடுப்பூசி போட்டுள்ளனா். மற்றவா்கள் இன்னும் 10 நாள்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வாா்கள்.
முதல் முறையாக வாக்களிப்போா் 20,000 போ்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 9,53,767 ஆண், 10,03,332 பெண், திருநங்கைகள் 104, ராணுவப் பணியில் உள்ளவா்கள் 278 என மொத்தம் 19,57,481 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 20,000 போ் 18 வயது பூா்த்தியாகி புதிதாக வாக்காளா்களாகச் சோ்க்கப்பட்டவா்கள்.
ஈரோடு மாவட்டத்துக்கு இரு தொகுதிக்கு ஒருவா் என நான்கு தோ்தல் செலவின பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் விரைவில் அப்பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா்.