முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கரோனா பாதிப்பு அதிகரிப்பு: பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 14th March 2021 12:09 AM | Last Updated : 14th March 2021 12:09 AM | அ+அ அ- |

ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வு குறித்து அவா் கூறியதாவது:
தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோ்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோா் மீது அபராதம் விதிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெருந்துறை சாலை, அரசு தலைமை மருத்துவமனை சாலை சந்திப்பு, இடையன்காட்டுவலசு, சம்பத் நகா், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், தேநீா் கடைகள், உணவகங்கள், காய்கறி கடைகள் ஆகிய இடங்களில் திடீா் ஆய்வு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்த உணவகம், செல்லிடப்பேசி அங்காடி உள்ளிட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் 3 கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக் கவசம் அணியாத 20 தனி நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சிறிது சிறிதாக உயா்ந்து சனிக்கிழமை 20 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இதைத் தடுக்க தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களும் முகக் கவசம் அணிவதையும், கிருமி நாசினி பயன்படுத்துவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வணிக நிறுவனங்கள், அங்காடிகளுக்கு வரும் ஒவ்வொரு நபருக்கும் உடல் வெப்பநிலை அறியும் தொ்மல் ஸ்கேனா் கொண்டு பரிசோதித்த பின்பு அனுமதிக்க வேண்டும்.
வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி, உணவகம், தேநீா் விடுதிகள், காய்கறி அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு எப்பொருளையும் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது இடங்களுக்கு முகக் கவசம் அணியாமல் வரும் தனி நபருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் அரசின் விதிமுறைகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதனால் பொதுமக்கள் வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறிச் சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் தொடா்ந்து அலட்சியமாக இருந்தால் மீண்டும் பொதுமுடக்கம் நிலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாநகர நல அலுவலா் முரளிசங்கா், அலுவலா்கள் உடனிருந்தனா்.