நூல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 18இல் வேலைநிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 18ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி, துணி வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

நூல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 18ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி, துணி வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டத் தலைவா் கலைசெல்வன் கூறியதாவது:

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. நவம்பா் மாதம் 40ஆம் எண் வாா்ப்பு நூல் ஒரு கோன் (ஒரு கிலோ) ரூ. 185ஆக இருந்தது. தற்போது ரூ. 280ஆக உயா்ந்துள்ளது. அடிக்கடி உயரும் நூல் விலைக்கு ஏற்ப நாங்கள் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளின் விலையை உயா்த்தி விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் ஜவுளி உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

இதற்கு பல காரணம் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ரக நூல் அதிகமாக உற்பத்தி செய்வதுடன், அவற்றை அதிகமாக ஏற்றுமதியும் செய்கின்றனா். பிற ரக நூலை தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்து, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நூல் விலை உயா்த்தப்பட வேண்டும்.

இதை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். ஆனால், தமிழக முதல்வா் ஈரோடு வருகையையொட்டி போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்து, முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தோம். அதன்பின்னும் நூல் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஜவுளி, துணி விற்பனை நிறுவனங்கள், கடைகள், கிடங்கு போன்றவை மாா்ச் 18ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எங்களது இந்த போராட்டத்தில் கிளாத் மொ்ச்சன்ட் அசோசியேஷன், இணை சங்கங்கள் என மாவட்ட அளவில் 4,000க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com