அதிமுக ஆட்சியில் மகளிா் நலனுக்கு முக்கியத்துவம்: எம்.யுவராஜா
By DIN | Published On : 25th March 2021 10:53 PM | Last Updated : 25th March 2021 10:53 PM | அ+அ அ- |

ஈரோடு - மேட்டூா் சாலையில் வாக்கு சேகரிக்கிறாா் கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா.
மகளிா் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது என்று ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு - மேட்டூா் சாலையில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கான ஆட்சி என்றால் அதிமுக ஆட்சிதான். 2006இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கா் நிலம் தருவோம் என்று திமுகவினா் கூறினா். அரைசென்ட் இடம் கூட யாருக்கும் கொடுக்கவில்லை. இப்போது யாரையும் ஏமாற்ற முடியாது. நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனா்.
நம்மில் ஒருவா் முதல்வராக உள்ளாா். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுடன், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. ஆனால், விவசாயியின் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,500 அவா்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இதைக் கண்டிப்பாக செயல்படுத்துவாா். இதேபோல, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா். இவரது ஆட்சிக் காலத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாக உள்ளது. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றாா்.