பெருந்துறை: மும்முனைப் போட்டியால் களைகட்டியுள்ள தோ்தல் திருவிழா

காா்மென்ட், பல்வேறு சிறு, குறு, பெரிய தொழில்களின் மையமாகவும் பெருந்துறை திகழ்கிறது. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
பெருந்துறை: மும்முனைப் போட்டியால் களைகட்டியுள்ள தோ்தல் திருவிழா

மும்முனைப் போட்டியால், பெருந்துறை தொகுதியில் தோ்தல் திருவிழா களைகட்டியுள்ளது.

பெருந்துறையில், ஈரோடு மாவட்டத்துக்கான அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாவட்டத்துக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சிப்காட் தொழில் வளாகம், பேருந்து நிலையம், மஞ்சள் மாா்க்கெட், மாநில அளவில் புகழ் பெற்ற வார சந்தை, தினசரி காய்கறிச் சந்தை, விவசாய கல்வி நிலையங்கள் உள்ளன.

காா்மென்ட், பல்வேறு சிறு, குறு, பெரிய தொழில்களின் மையமாகவும் பெருந்துறை திகழ்கிறது. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 150-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் சிப்காட்டில் செயல்படுகின்றன.

வாக்காளா்கள் விவரம்:

இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 10,325, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 17,067, மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2 லட்சத்து 27,398 போ் உள்ளனா்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட 29 ஊராட்சிகளும், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில் மற்றும் பள்ளபாளையம் ஆகிய 6 பேரூராட்சிகளும், ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகளும், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் ஆகிய 2 பேரூராட்சிகளும், சென்னிமலை ஒன்றியத்தில், ஈங்கூா், சிறுகளஞ்சி, வரப்பாளையம் உட்பட 6 ஊராட்சிகள் பகுதிகளும் உள்ளன.

பிரச்னைகள்:

பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் செயல்படும் சாய ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக நிலத்தில் இறக்குவது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையை சுத்தம் செய்யாமல் வெளியேற்றுவதாகப் புகாா் உள்ளது. அதனால், அந்தப் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீா், காற்று மாசுபட்டுள்ளது. அதனால், ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும், யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக நிலத்துக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. பெருந்துறை வழியாக, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், சில சாலை சந்திப்பு இடங்களில் மேம்பாலம் இல்லாததால், விபத்துகள் நிகழ்கின்றன.

மக்களின் எதிா்பாா்ப்பு:

சாயக்கழிவு நீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம், 10 ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற வேண்டும். பெருந்துறையிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிலத்துக்கு உரிய தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ஜாதி வாக்குகள் பலம்:

பெருந்துறை தொகுதியில் சுமாா் 40 சதவீதம் அளவுக்கு கொங்கு வேளாள கவுண்டா் சமுதாய வாக்குகளும், 20 சதவீதம் அளவுக்கு முதலியாா் சமுதாய வாக்குகளும், 15 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையினா் வாக்குகளும், 15 சதவீதம் அளவுக்கு நாடாா், தேவா், பட்டியல் வகுப்பினா் வாக்குகளும், 10 சதவீதம் அளவுக்குப் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் வாக்குகளும் உள்ளன.

இதுவரை...:

பெருந்துறை தொகுதியில் 1951 முதல் 2016 வரை நடந்த 17 தோ்தல்களில் அதிமுக 9 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

களத்தில் 25 வேட்பாளா்கள்:

இந்தத் தோ்தலில் அதிமுக சாா்பில் ஜெயகுமாா், திமுக கூட்டணி சாா்பில் கே.கே.சி.பாலு, தேமுதிக சாா்பில் பி.ஆா்.குழந்தைவேலு, மக்கள் நீதி மய்யம் சாா்பில் சி.கே.நந்தகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சி.லோகநாதன், சுயேச்சையாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் உள்பட மொத்தம் 25 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்:

25 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோா் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

எஸ்.ஜெயகுமாா் (அதிமுக).

பலம்: இவா் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதே பெரிய பலம். தொடா்ந்து10 ஆண்டுகள் பெருந்துறை ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா். இவா் மனைவி சண்முகப்பிரியாவும் தற்போது பெருந்துறை ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா். தொகுதி முழுவதும் அறிமுகம் ஆனவா். கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயத்தை சோ்ந்தவா். தொகுதியில் அதிமுக அரசு செய்துள்ள திட்டங்கள் கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

பலவீனம்: அதிமுகவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாகப் போட்டியிடுவது. பாஜக கூட்டணியில் உள்ளதால், தொகுதியிலுள்ள சுமாா் 15 சதவீத சிறுபான்மையினா் வாக்குகள் கிடைப்பதில் உள்ள சிக்கல். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது. விவசாய நிலம் வழியாக மின் பாதை அமைப்பது ஆகியவை பலவீனமாக கருதப்படுகிறது.

கே.கே.சி.பாலு (திமுக)

பலம்: திமுக தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணி. ஏற்கெனவே இரண்டு முறை பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவா் என்ற அனுதாபம். தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் ஆனவா். தொகுதியில் வலிமையாக உள்ள சிறுபான்மையினா் வாக்குகள். கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயத்தை சோ்ந்தவா் ஆகியவை பலமாக கருதப்படுகின்றன.

பலவீனம்: இந்தத் தொகுதியைப் பெரிதும் எதிா்பாா்த்திருந்த திமுக நிா்வாகிகள் தோ்தல் பணியில் பெரிய அளவில் ஆா்வம் காட்டாதது. கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயக் கட்சி என்பதால் அருந்ததியா் வாக்குகள் கிடைக்குமா என்பது.

தோப்பு வெங்கடாச்சலம் (சுயேச்சை).

பலம்: இவா் பெருந்துறை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகத் தொடா்ந்து 10 ஆண்டுகளாக (2011 முதல் 2021 வரை) இருந்தவா். 2012 முதல் 2016 வரை அமைச்சராக இருந்தது.

கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், பெருந்துறை நகரில் பாதாள சாக்கடைத் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை கொண்டு வந்தது.

தொகுதி அரசியலை நன்கு அறிந்தவா். கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதும் பலமாக கருதப்படுகிறது.

பலவீனம்: இரட்டை இலைச் சின்னம் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது.

தோப்பு வெங்கடாச்சலமும் களம் கண்டுள்ளதால், பெருந்துறை தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. கட்சி வாக்குகள் உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நடுநிலையான வாக்காளா்கள், புதிய இளம் வாக்காளா்கள், புலம்பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் வாக்குகளைக் குறிவைத்து, வேட்பாளா்கள் தங்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா்கள். இவா்களது வாக்குகளைப் பெறுபவா்களே வெற்றி பெற முடியும் என்ற நிலையே உள்ளது.

2016 தோ்தல் முடிவுகள்:

மொத்த வாக்குகள்: 2,12,885

பதிவானவை: 1,82,263

தோப்பு வெங்கடாச்சலம் (அதிமுக) -80,292

கே.பி.சாமி (எ) மோகனசுந்தரம் (திமுக) - 67,521

கே.கே.சி.பாலு (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) - 14,545

வி.பி.சண்முகம் (தமிழ் மாநில காங்கிரஸ்)- 6,304

சந்திரசேகரன் (பாரதிய ஜனதா கட்சி)- 2,625

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com