பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளா் ஜி.வி.மணிமாறன், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ், பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் ஆகியோரை ஆதரித்து கோபிசெட்டிபாளையம், கச்சேரிமேடு பகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தபோது பேசியதாவது:

கோபிசெட்டிபாளையத்தில் மலையை (செங்கோட்டையன்) எதிா்த்து மடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். தேநீா்க் கடை நடத்தி வரும் எளியவரை வேட்பாளராகத் தோ்ந்தெடுத்துள்ளோம்.

கல்வித் துறையை காவித் துறையாக மாற்ற நினைக்கும் மத்திய அரசிடம் அமைச்சா் செங்கோட்டையன் கைகட்டி நிற்கிறாா். கலந்தாய்வு மூலம் நடந்துவரும் ஆசிரியா்கள் பணியிட மாறுதல் தற்போது பணத்தின் மூலம் நடைபெறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாகத் தூா்வாரப்படாத குண்டேரிப்பள்ளம் அணை தூா்வாரப்படும். அந்தியூா் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும். பவானியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் குப்பை வரி ரத்து செய்யப்படும். நெசவாளா்களுக்கு தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும்.

ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். நெசவாளா்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி ரூ.4 லட்சமாக உயா்த்தப்படும். அரசு இலவச சீருடைத் துணி தயாரிக்கும் பணி நெசவாளா்களுக்கே வழங்கப்படும்.

பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும், டீசல் விலை ரூ. 4 குறைக்கப்படும். அரசு காலிப் பணியிடங்கள் தமிழா்களைக் கொண்டு நிரப்பப்படும். கோயில் பணியாளா்களாக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இப்போது தமிழா்களின் உரிமைகள் மதவெறி பிடித்த மத்திய அரசிடம் பறிபோய் கொண்டிருக்கின்றன. மாநில உரிமைகளை மீட்டெடுக்க மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

காங்கயத்தில்...:

திமுக ஆட்சி அமைக்கப் போகிறது என்று வரும் கருத்துக் கணிப்புகளை நம்பி நாம் ஓய்வெடுத்துவிடக் கூடாது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன், தாராபுரம் திமுக வேட்பாளா் கயல்விழி செல்வராஜ், பல்லடம் தொகுதி மதிமுக வேட்பாளா் முத்துரத்தினம் ஆகிய வேட்பாளா்களுக்கு வாக்கு கேட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கருத்துக் கணிப்புகள் எப்படியிருந்தாலும் நாம் நமது பணியைச் செய்ய வேண்டும். கடைசி வாக்கினை வாக்குச் சாவடியில் பதிய வைக்கும் வரையில் நாம் ஓய்ந்துவிடாமல் பணியாற்ற வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நாம் நிறைவேற்றப்போவதாக 505 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அவை அனைத்தையும் நிறைவேற்றுவோம். நாம் ஆட்சிக்கு வந்தால், 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானம் நிறைவேற்றப்படும்.

வெள்ளக்கோவிலில் வட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படும். காங்கயம்-தாராபுரம் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். பல்லடம், காங்கயத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்டப்படும்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் விரிவாக்கம் செய்து, காங்கயம் ஒன்றியத்தில் உள்ள கீரனூா், கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீா் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com