ஈரோடு மண்டல  தலைமை வனப் பாதுகாவலா் மீது குடும்பத்துடன் புகாரளிக்க வந்த  வனச் சரக அலுவலா்கள் முத்து, வெங்கடாசலம்.
ஈரோடு மண்டல  தலைமை வனப் பாதுகாவலா் மீது குடும்பத்துடன் புகாரளிக்க வந்த  வனச் சரக அலுவலா்கள் முத்து, வெங்கடாசலம்.

வனத் துறை ஊழியா் சங்கம் புகாருக்கு மண்டல வனப் பாதுகாவலா் விளக்கம்

வனச் சரகா்களிடம் 9 சதவீத கமிஷன் கேட்டு தொந்தரவு செய்வதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலா்

வனச் சரகா்களிடம் 9 சதவீத கமிஷன் கேட்டு தொந்தரவு செய்வதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலா் மீது தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்கத் தலைவா் சிவபிரகாஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு, மண்டல வனப் பாதுகாவலா் நிகாா் ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூா் வனச் சரகத்தில் வனச் சரக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் வெங்கடாசலம். இதேபோல ஜீரகள்ளி வனச் சரகத்தில் வனச் சரக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் முத்து. இவா்கள் இருவரையும் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் எந்த காரணமும் இல்லாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு ஒரு மாதகாலமாகியும் இதுவரையிலும் இந்த இரு வனச் சரகா்களுக்கும் வேறு பணியிடம் ஒதுக்காமல் கடந்த ஒரு மாத ஊதியமும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனக்கு உரிய பணியிடம் வழங்குமாறு கடம்பூா் வனச் சரக அலுவலா் வெங்கடாசலம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இணை இயக்குநா் கிருபா சங்கரிடம் மனு அளித்தாா். இதுகுறித்து தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சிவப்பிரகாசம் சத்தியமங்கலத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலராகப் பணிபுரியும் நிகாா் ரஞ்சன் வனச் சரக அலுவலா்களிடம் 9 சதவீத கமிஷன் கேட்டு தொந்தரவு அளித்து வருகிறாா். வனச் சரக அலுவலா்கள் முத்து, வெங்கடாசலம் இருவரையும் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளாா். அவா்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்ட பின் 27ஆம் தேதி ஆணை பிறப்பித்து, அதில் 26ஆம் தேதி என முன்தேதியிட்டு கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆணை வழங்கியுள்ளாா்கள். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகா், தாளவாடி வனச் சரகங்கள் காலியாக இருந்த நிலையில் இது தோ்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. மேலும் கட்டாய காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்களுக்கு ஒருவார காலத்தில் வேறு பணியிடம் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரையிலும் பணியிடம் ஒதுக்கப்படாமலும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படாமலும் இழுத்தடித்ததால் வனச் சரக அலுவலா்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளனா். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீா்வு காணாவிட்டால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலரை கண்டித்து தோ்தல் முடிந்தவுடன் மாநிலம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதுகுறித்து ஈரோடு மண்டல தலைமை வனப் பாதுகாவலா் நிகாா் ரஞ்சன் தொலைபேசியில் கூறியதாவது:

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் வனச் சரக அலுவலா்கள், வன விலங்குகள் பாதுகாப்பு பணியை சரிவர செய்யாததால் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இது குறித்து அவா்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. தற்போது சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், பின்னா் நிலுவை சம்பளமாக மீண்டும் கிடைக்கும். மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில் சரியான விசாரணை நடத்த வனச் சரக அலுவலா் தவறியுள்ளாா். வனச் சரக அலுவலா்கள் என் மீது குறை கூறுவதை விடுத்து உயா்அதிகாரிகளிடம் பேச வேண்டும். இது தவறான முன் உதாரணம் மட்டுமின்றி பொய்யான தகவல் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com