தென்னை நாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

உடுமலை அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாயின
தென்னை நாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

உடுமலை அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாயின.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வட இந்தியா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு கயிறுகள், கால் மிதியடிகள் மற்றும் நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுமாா் 6 ஆயிரம் சதுர அடியில் நான்கு கிடங்குகளில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து அந்தப் பகுதியில் பலமான காற்று வீசியதால் தீ அனைத்து பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது.

தகவல் கிடைத்ததும் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கத் தொடங்கினா். மேலும் உள்ளூரில் உள்ள லாரிகள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முயன்றனா். ஆனாலும் அங்கு 2 ஏக்கா் பரப்பளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நாா்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. மேலும் தொழிற்சாலைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

இதற்கிடையில் தீயணைப்பு வீரா்கள் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா். இதனால் ஓரளவிற்கு நாா்கள் காப்பாற்றப்பட்டன. இந்த பயங்கர தீ விபத்தில் சுமாா் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது. மின்சார கசிவினால் இந்த விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து உடுமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com