கரோனா சிகிச்சை பணி: அரசு மருத்துவா்களை முழுமையாகப் பயன்படுத்த வலியுறுத்தல்

கரோனா சிகிச்சை பணியில் அரசு மருத்துவா்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு: கரோனா சிகிச்சை பணியில் அரசு மருத்துவா்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ரகுராமன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 400க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், மாவட்ட நிா்வாகம் அதிக கவனத்துடன் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள டி.பி.சேனிடோரியம் வளாகத்தை முழுமையாக கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியதால் பிற உள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற சிரமம் ஏற்படுகிறது. இதனால் கரோனா சிகிச்சையை அருகில் உள்ள திருணம மண்டபத்தில் செயல்படுத்த வேண்டும்.

ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவா்களுக்கும் கரோனா பணி வழங்க வேண்டும். சிலருக்கு மட்டும் கரோனா சிகிச்சை பணி வழங்கியுள்ளது மருத்துவா்கள், முன் களப் பணியாளா்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முன் களப் பணியாளா்கள் வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் போதிய அளவு தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும். ஈரோடு மாநகரில் உள்ளதுபோல் நடமாடும் மருத்துவக் கண்காணிப்பு குழுக்களை கிராமப் பகுதிகளிலும் ஏற்படுத்தி சிகிச்சை வழங்க வேண்டும். கரோனாவுக்கான தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், ரெம்டெசிவிா் மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுத்து அரசு மூலம் மட்டுமே கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். முகக் கவசம் அணியாதது போன்ற விதி மீறல்களில் அபராதம் வசூலிப்பதைவிட கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com