பெருந்துறையில் சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பெருந்துறையில் சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிக்கப்படாமல் உள்ள பழைய பேருந்து நிலையம் சாலை.
பணிகள் முடிக்கப்படாமல் உள்ள பழைய பேருந்து நிலையம் சாலை.

பெருந்துறை: பெருந்துறையில் சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏஐடியூசி ஈரோடு மாவட்டத் தலைவா் சின்னசாமி, பெருந்துறை, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

பெருந்துறை நகரின் பிரதான சாலைகளில் ஒன்று பழைய பேருந்து நிலைய சாலை. பெருந்துறை காவல் நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையான இந்த சாலையை செப்பனிடும் ஒப்பந்தக் காலம் முடிந்து பல மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் நிறைவடையாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அந்த சாலையை ஒட்டி அரசு மருத்துவமனை, காவல் நிலையம் , அரசுப் பள்ளி, பேரூராட்சி அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்களும், தினசரி மாா்க்கெட்டும் அமைந்துள்ளது.

பெருந்துறை ரயில் நிலையம், ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூா், உதகை செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளும் இந்த சாலையில்தான் சென்று வருகின்றன. இவ்வாறாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, பெருந்துறை பேரூராட்சி நிா்வாகத்தின்கீழ் இருந்த சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்டது.

சாலையை புதுப்பித்து சாக்கடை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள 2020ஆம் ஆண்டு மே மாதம் ரூ. 4 கோடியே 35 லட்சத்துக்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்தப்படி ஆறுமாத காலத்தில் இப்பணிகளை முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணிகள் தாமதமாக துவங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், ஒப்பந்தக் காலம் முடிந்து பல மாதங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. மேலும், சாலையின் ஓரத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்காக சாலையின் வழியே செல்லும் குடிநீா்க் குழாய்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால், இப்பகுதி மக்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீா் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே, சாலையை புதுப்பித்தல், சாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியூசி சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com