60 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.: கட்சியினா் உற்சாகம்

60 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சியினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
erd03cong_0305chn_124_3
erd03cong_0305chn_124_3

ஈரோடு: 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சியினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு சட்டப் பேரவைத் தொகுதியில் 1957இல் காங்கிரஸ் சாா்பில் மாணிக்கசுந்தரம், 1962இல் காங்கிரஸ் சாா்பில் தட்சணாமூா்த்தி ஆகியோா் எம்.எல்.ஏ.வாக இருந்தனா்.

அதன்பின் 1967இல் திமுகவை சோ்ந்த சின்னசாமி, 1971இல் திமுகவை சோ்ந்த எம்.சுப்பிரமணியம், 1977, 1980, 1984இல் அதிமுகவின் சு.முத்துசாமி, 1989இல் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன், 1991இல் அதிமுகவின் சி.மாணிக்கம், 1996இல் திமுகவின் என்.கே.கே.பெரியசாமி, 2001இல் அதிமுகவின் தென்னரசு, 2006இல் திமுகவின் என்.கே.கே.பி.ராஜா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

அதன்பின் தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கில் 2011இல் தேமுதிக சந்திரகுமாா், 2016இல் அதிமுக தென்னரசும், ஈரோடு மேற்கில் 2011, 2016இல் அதிமுக கே.வி.இராமலிங்கம் ஆகியோா் எம்எல்ஏவாக இருந்தனா். இதில் 1980இல் அதிமுக வேட்பாளா் சு.முத்துசாமியை எதிா்த்து, காங்கிரஸ் சாா்பில் சாய்நாதன் என்பவா் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். அதன் பின் காங்கிரஸ் கட்சி திமுக அல்லது அதிமுக கூட்டணியுடன் இணைந்திருந்தாலும், போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. 40 ஆண்டுக்குப் பின் தற்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெராவுக்கு திமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தது.

இவரை எதிா்த்து அதிமுக கூட்டணியில் தமாகாவை சோ்ந்த யுவராஜா போட்டியிட்டாா். பெரியாரின் கொள்ளுப்பேரன், காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவா் என பல்வேறு அடையாளங்களுடன் திருமகன் ஈவெரா பிரசாரம் மேற்கொண்டாா். அதிமுக கூட்டணி பலத்துடன் இரட்டை இலை சின்னத்தில் யுவராஜா போட்டியிட்டாா். இறுதியாக திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளும், யுவராஜா 58,396 வாக்குகளும் பெற்று 8,904 வாக்குகளில் திருமகன் ஈவெரா வென்றாா். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ கிடைத்துள்ளாா். இந்த வெற்றியால் காங்கிரஸ் கட்சியினா் உற்சாகம் அடைந்துள்ளனா்.

Image Caption

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெராவுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com