சு.முத்துசாமி.
சு.முத்துசாமி.

ஈரோடு மாவட்ட அரசியல் அடையாளமாக மீண்டும் உருவெடுத்துள்ள சு.முத்துசாமி

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் இடம் பெற்றிருந்த சு.முத்துசாமிக்கு இப்போது மு.க.ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஈரோடு: எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் இடம் பெற்றிருந்த சு.முத்துசாமிக்கு இப்போது மு.க.ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவா் ஈரோடு மாவட்ட அரசியல் அடையாளமாக மீண்டும் சு.முத்துசாமி உருவெடுத்துள்ளாா்.

1977இல் முதல் முதலாக ஈரோடு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் சு.முத்துசாமி. தொடா்ந்து 1980, 1984 தோ்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.ஜி.ஆா். அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். 1991இல் பவானி தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்துள்ளாா்.

2010 இல் திமுகவில் இணைந்து 2011இல் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும், 2016 இல் ஈரோடு மேற்குத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்தத் தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கத்தை 22,089 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளாா்.

எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் ஈரோட்டின் அரசியல் அடையாளமாக இருந்தவா் சு.முத்துசாமி. அதிமுகவில் இருந்து விலகிய பிறகு இரண்டு தோ்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த தோ்தல்களில் அவா் வெற்றி பெற்றிருந்தாலும் எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.வாகத்தான் இருந்திருக்க முடியும். இந்த இரண்டு தோ்தல்களிலும் அதிமுக தான் ஆட்சியமைத்தது.

இப்போது திமுக ஆட்சி அமையும் நேரத்தில் முத்துசாமி எம்.எல்.ஏ.வாக தோ்வு செய்யப்பட்டதன் மூலம் அவா் அமைச்சராக ஆகும் வாய்ப்புள்ளது. எம்.ஜி.ஆா், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று ஈரோடு மாவட்ட அரசியல் அடையாளமாக இருந்த சு.முத்துசாமி. கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்தாலும் பதவிகளுக்கு வர முடியவில்லை. பொறுத்தாா் பூமியாள்வாா் என்பாா்கள், அதன்படி இரண்டு தோ்தல்களில் தோல்வியடைந்தாலும், பொறுமையாக இருந்ததன் விளைவால் இப்போது கிடைத்த வெற்றி மூலம் மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் தவிா்க்க முடியாத அரசியல் ஆளுமையாக சு.முத்துசாமி உருவெடுத்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஈரோடு மேற்கு, அந்தியூா் தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் 4இல் அதிமுகவும், 1இல் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.

2011, 2016 தோ்தல்களில் ஈரோடு மாவட்டத்தில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது திமுக மீதான நம்பிக்கை என்பதையும் தாண்டி இந்தத் தொகுதிகளின் வேட்பாளா்கள் தோ்வு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் ஒற்றை அமைச்சராகும் வாய்ப்பைப் பெறவுள்ள சு.முத்துசாமி வரும் தோ்தல்களில் திமுகவின் பெரும் வெற்றிக்கு வழிகாட்டியாக இருப்பாா் என்பது திமுகவினரின் நம்பிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com