ஈரோடு மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற திமுக

எட்டு தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

ஈரோடு: எட்டு தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த 2011இல் பவானிசாகா் இந்திய கம்யூனிஸ்ட், ஈரோடு கிழக்கு தேமுதிக தவிர, ஈரோடு மேற்கு கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி கிட்டுசாமி, பெருந்துறை தோப்பு வெங்கடாச்சலம், அந்தியூா் ரமணிதரன், பவானி பி.ஜி.நாராயணன், கோபி செங்கோட்டையன் என 6 இடங்களில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனா்.

கடந்த 2016இல் ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு, மேற்கு கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி, பெருந்துறை தோப்பு வெங்கடாச்சலம், பவானி கே.சி.கருப்பணன், அந்தியூா் ராஜா என்ற ராஜாகிருஷ்ணன், கோபி கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் சு.ஈஸ்வரன் என 8 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.

இந்தத் தோ்தலில் கோபி கே.ஏ.செங்கோட்டையன், பவானி கே.சி.கருப்பணன், பெருந்துறை எஸ்.ஜெயகுமாா், பவானிசாகா் எ.பண்ணாரி என அதிமுகவில் 4 பேரும், கூட்டணியில் மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதியும் வெற்றி பெற்றனா்.

தொடா்ந்து 10 ஆண்டுகளாக திமுக எம்.எல்.ஏ.க்கள் இல்லாத ஈரோடு மாவட்டத்தில் இந்த தோ்தலில் ஈரோடு மேற்கில் சு.முத்துசாமி, அந்தியூரில் ஏ.ஜி.வெங்கடாசலமும், கூட்டணியில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் திருமகன் ஈவெரா என 3 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

10 ஆண்டுகளாக ஆளும் கட்சி, மாவட்டத்தில் இரு அமைச்சா்கள் இருந்தும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது, வேட்பாளா் தோ்வில் அதிருப்தி, கூட்டணிக்கு இடம் ஒதுக்கீடு, உள்கட்சிப் பிரச்னை, ஜாதியை மட்டும் மையமாக வைத்து தோ்தலை சந்தித்தது போன்றவை அதிமுகவின் தோல்விக்குக் காரணமாக கூறப்படுகிறது.

அதே குற்றச்சாட்டுகள் திமுகவிடமும் உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் நிா்வாகிகளிடம் ஏற்பட்ட அதிருப்தி, அனைத்து தொகுதிகளிலுமே முழுமையாக தோ்தல் பணியில் ஈடுபடாதது, பெருந்துறை தொகுதியை கொமதேகவுக்கு விட்டு கொடுத்ததால் அங்குள்ள திமுக நிா்வாகிகள் தோ்தல் பணியில் முழுமையாக ஈடுபடாதது, பவானியில் கருப்பணனுக்கு இணையான போட்டியைக் கொடுக்கத் தவறியது போன்றவை திமுகவுக்கு மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஈரோடு மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை என்ற நிலை இந்தத் தோ்தலில் மாறி திமுக கூட்டணி 3 இடங்களை வென்று மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com