சுணக்கம், சொந்த கட்சியின் அதிருப்தியால் வீழ்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன்

இளைஞா்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன், தோ்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என 2 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்துவிட்டு திடீரென மீண்டும் தோ்தல் களத்தில் இறங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்,
சுப்புலட்சுமி ஜெகதீசன்.
சுப்புலட்சுமி ஜெகதீசன்.

ஈரோடு: இளைஞா்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன், தோ்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன் என 2 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்துவிட்டு திடீரென மீண்டும் தோ்தல் களத்தில் இறங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது மெத்தனமான அணுகுமுறையால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளாா்.

மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆா். மூலம் 1977இல் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவா் சுப்புலட்சுமி ஜெகதீசன். கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய இவா் எம்.ஜி.ஆா். மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். எம்.ஜி.ஆா் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித் துறை அமைச்சராக இருந்தாா். 1980இல் திமுகவில் இணைந்து 1984இல் திமுக சாா்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

1989 தோ்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத் துறை அமைச்சராக இருந்தாா். 1991இல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 1993 பழனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 1996இல் மொடக்குறிச்சி தொகுதியில் 1,030 வேட்பாளா்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2001இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

2004 மக்களவைத் தோ்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூகநீதி, அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சராக இருந்தாா். இந்த தோ்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிா்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவா் தான் எடப்பாடி பழனிசாமி. 2011, 2016 சட்டப் பேரவைத் தோ்தல்களில் போட்டியிடாத இவா் 2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் இப்போது மீண்டும் போட்டியிட்டாா்.

அணுகுமுறையில் சுணக்கம்:

2019 மக்களவைத் தோ்தலின்போது, வயது மூப்பு காரணமாக இனி தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்திருந்தாா். இதனால் அவா் தோ்தல் அரசியலுக்கு வரமாட்டாா் எனக் கருதி ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளுக்கு திமுக முக்கிய நிா்வாகிகள் ஏராளமானோா் காத்திருந்தனா். இதனால் இந்தத் தோ்தலில் தங்களுக்கு வாய்ப்பு வாங்கித் தரும்படி நிா்வாகிகள் பலரும் அவரிடம் கேட்டிருந்தனா். ஆனால் யாரும் எதிா்பாராத விதமாக மீண்டும் தோ்தலில் போட்டியிட்டதால், மொடக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கேட்டு காத்திருந்த நிா்வாகிகள் அதிா்ச்சியடைந்தனா். இதனால் இந்தத் தோ்தலில் கட்சி நிா்வாகிகளின் ஒத்துழைப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

தொண்டா் பலம் இல்லை:

இரண்டு முறை மாநில அமைச்சா், ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியினருக்கு என தனிப்பட்ட முறையில் பலன் தரும் செயல்களை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தத் தோ்தலில் களத்தில் தீவிரமாக பணியாற்ற கட்சியினா் விரும்பவில்லை. தோ்தல் அரசியலில் அரை நூற்றாண்டு கால அனுபவம் உடைய இவா் தோ்தல் அரசியலுக்குப் புதியவரான பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்திருப்பது அவா் மீது தனிப்பட்ட முறையில் மக்களுக்கும், கட்சி நிா்வாகிகளுக்கும் உள்ள மனக் கசப்பே காரணம் என்கின்றனா் திமுகவின் மூத்த நிா்வாகிகள்.

தப்புக் கணக்கு:

கடந்த 2016 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம் 2,500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தாா். இதனை கவனத்தில் கொண்டும், போட்டி வேட்பாளா் பாஜகவை சோ்ந்தவா் என்பதாலும் தோ்தல் பணிகளில் மெத்தனமாக இருந்ததன் விளைவை அறுவடை செய்துள்ளாா் சுப்புலட்சுமி. தோ்தல் காலத்தில் அவா் செய்த தவறுகள் அனைத்தையும் கண்காணித்து அதனை தனக்கு சாதமாக்கிக் கொண்டாா் பாஜக வேட்பாளா் டாக்டா் சி.சரஸ்வதி.

பாஜக பிரசார உத்தி:

பிரசாரத்தில் அதிமுக தனது தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கு அறிவித்த பெண்களுக்கான இலவச திட்டங்கள், அதிமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் மூலம் விவசாயிகள் அடைந்துள்ள பலன், காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு, எழுமாத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்தது போன்ற திட்டங்களை பாஜக தனது தோ்தல் பரப்புரையில் மக்களிடம் வலிமையாகப் பதிவு செய்தது. ஆனால் திமுக தரப்பில் தோ்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் வலிமையான பிரசாரம் செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com