தட்டச்சு, கணினி பள்ளிகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க கோரிக்கை

தட்டச்சு, கணினி பள்ளிகளைத் திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: தட்டச்சு, கணினி பள்ளிகளைத் திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தட்டச்சு, கணினி பள்ளிகள் சங்க மாநிலத் தலைவா் எல்.செந்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய மனு விவரம்:

தமிழகத்தில் 2,200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கடந்த 2020இல் கரோனா பாதிப்பு காலத்தில் இந்த பயிலகங்கள் முழுமையாக மூடப்பட்டன. பின்னா் செப்டம்பா் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது கரோனா பரவல் அதிகரிப்பால் மீண்டும் தட்டச்சு, கணினி பயிலகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா காலத்தில் பயிலகங்கள் மூடப்பட்டதால் 10,000 குடும்பங்களுக்குமேல் வாழ்வாதாரத்தை இழந்தோம். தட்டச்சு பயிற்சியை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது. இதனால் மாணவ, மாணவிகளிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்க முடியாது.

பெரும்பாலான தட்டச்சு பயிற்சி மையங்கள், வாடகை கட்டடங்களில்தான் செயல்படுகின்றன. நீண்ட காலமாக மையங்களை மூடினால், வாடகையும் கொடுக்க முடியாது. இதனால் தட்டச்சு பயிலகங்கள் நடத்தி வருபவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. தவிர 2020 பிப்ரவரி மாதம் தோ்வுக்காக தயாரான 1.5 லட்சம் மாணவ, மாணவியா் தோ்வு எழுத முடியாத நிலையில் உள்ளனா். அவா்கள் தோ்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும்.

அனைத்து தட்டச்சு பயிற்சி மையங்களிலும் அரசின் வழிகாட்டு முறைப்படி, போதிய இடைவெளியில் ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் மொத்தமாக யாரும் வர மாட்டாா்கள். எனவே பயிற்சி மையத்தை நடத்தி வருபவா்கள், மாணவ, மாணவியா் நலன் கருதி, விதிமுறைகளுடன் தட்டச்சு, கணினி பள்ளிகளைத் திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com