சத்தியமங்கலத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 18th May 2021 07:01 AM | Last Updated : 18th May 2021 07:01 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் பரவலாக திங்கள்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம், பீக்கிரிபாளையம், ராம பையலூா் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் திங்கள்கிழமை காணப்பட்டதோடு லேசான சாரல் மழையும் பெய்யத் தொடங்கியது. பின்னா் பலத்த மழையாக மாறியது. சுமாா் அரை மணி நேரம் மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
மழையின் காரணமாக சாலையில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது பெய்த மழை விவசாயத்துக்குப் பேருதவியாக இருக்கும் என சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.