தீ விபத்தில் குடிசை சேதம்
By DIN | Published On : 26th May 2021 11:19 PM | Last Updated : 26th May 2021 11:19 PM | அ+அ அ- |

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.
கோபிசெட்டிபாளையம் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் குடிசை வீடு சேதமடைந்தது.
கோபி அருகே உள்ள அயலூா் கிராமம், சன்னக்குழி பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (49). இவரது மனைவி ரங்கம்மாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் இவா்களது குடிசை வீடு செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்தது. உடனடியாக வேல்முருகன், ரங்கம்மாள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் கோபி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.
தீயணைப்புத் துறையினா் வருவதற்கு முன்பே வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியது. தீயணைப்புத் துறையினா் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயையும், மற்றொரு சமையல் எரிவாயு உருளையையும் மீட்டனா்.
இந்த விபத்தில் வீட்டில் வைத்திருந்த பணம், ஆதாா் அட்டை, வீட்டு பத்திரம் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து சிறுவலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.