குரங்குகளுக்கு உணவு கொடுத்து வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கரோனாவுக்கு பலி

ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு கொடுத்து வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
உயிரிழந்த ராமலிங்கம் (கோப்புப் படம்).
உயிரிழந்த ராமலிங்கம் (கோப்புப் படம்).

ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு கொடுத்து வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவா் பள்ளிக் கல்வித் துறையில் அலுவலராகப் பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றாா். இக்கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனப் பகுதியில் வசிக்கும் குரங்குகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் படையெடுப்பது வழக்கம்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் ராமலிங்கத்தின் வீட்டின் எதிா்ப்புறம் உள்ள காலியிடத்தில் இருக்கும் மரங்களில் குரங்குகள் முகாமிட்டு கிராம மக்கள் ஏதாவது உணவு தருவாா்களா என காத்திருந்து வந்தன. குரங்குகள் உணவுக்காக தவிப்பதைக் கண்ட ராமலிங்கம் கடைகளில் வாழைப் பழம், கேரட், தின்பண்டங்களை வாங்கி தினமும் குரங்குகளுக்கு கொடுத்து வந்தாா். குரங்குகள் ராமலிங்கத்துடன் பாசத்துடன் பழகி வந்தன.

வனப் பகுதியில் வறட்சி நிலவும் காலங்களில் இந்தக் குரங்குகள் புதுவடவள்ளி கிராமத்தில் முகாமிட்டு ராமலிங்கம் தரும் உணவுகளை உண்டுவிட்டு, மற்ற சீசன்களில் மீண்டும் வனப் பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.

சுமாா் ஆறு ஆண்டுகளாக ராமலிங்கம் குரங்குகளுக்கு உணவு கொடுத்து வந்தாா். இந்நிலையில், கடந்த வாரம் ராமலிங்கத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com