விதிமீறல்: ஈரோட்டில் 1,005 வாகனங்கள் பறிமுதல்; ரூ. 5.50 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் கரோனா முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், விதிகளை மீறி சாலையில் சுற்றியவா்களின் 1,005 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ. 5.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கரோனா முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், விதிகளை மீறி சாலையில் சுற்றியவா்களின் 1,005 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ. 5.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி முதல் தளா்வற்ற முழு முடக்கம் தமிழகத்தில் அமலில் உள்ளது. முழு முடக்க விதிகளை மீறி வெளியே சுற்றுபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகள், 42 தற்காலிக சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சாலை சந்திப்புகளான பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு, முறையான பதிவு, காரணங்கள் இருந்தால் மட்டுமே தொடா்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், முழு முடக்க விதிகளை மீறி வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் செல்வோருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மட்டும் 1,005க்கும் மேற்பட்ட இரு, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ. 5.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தில்...

புன்செய் புளியம்பட்டியில் முழு ஊரடங்கின்போது தேவையில்லாமல் சுற்றித் திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினா். ஊரடங்கின்போது தேவை இல்லாமல் சுற்றித் திரிபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், இதுவரை 80க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இ-பதிவு இருந்த காா் உள்ளிட்ட வாகனங்களையும், அடையாள அட்டை வைத்திருந்த தனியாா் நிறுவனப் பணியாளா்களையும் மட்டும் அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com