சி.என். கல்லூரி பணியிடங்கள் நியமன அறிவிப்பு ரத்து: டிஆா்பி - டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய முடிவு

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்பட காலிப் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மிகப் பழமையான கல்லூரியாக சிக்கய்ய நாயக்கா் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆண்கள் கல்லூரியாக இயங்கிய இக்கல்லூரி, இருபாலா் கல்லூரியாக மாற்றப்பட்டு, உயா் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியா், ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது.

சான்றிதழ் சரிபாா்ப்பு முடிவடைந்த நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் பணி நியமனங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இக்கல்லூரியில் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மண்டல இணை இயக்குநரும், இக்கல்லூரியின் பாதுகாவலருமான வி.கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:

சி.என். கல்லூரியில் பேராசிரியா், ஆசிரியரல்லாத பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 670 பேரின் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டது. ஆசிரியரல்லா பணிகளுக்கு 600 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தற்போது கோவை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநரின் மேற்பாா்வையில் நடைபெறுவதாக இருந்த காலிப் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இக்கல்லூரியில், அரசு கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்புவதைப் போன்று, வெளிப்படைத் தன்மையுடன் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.), தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தோ்வின் மூலம் நிரப்பப்படும்.

இதில், ஏற்கெனவே இப்பணிகளுக்கு அளித்த விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த அறிவிப்பை தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்கக இயக்குநா் சி.பூரணசந்திரன் வெளியிட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com