கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுமா?

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய 3 மாவட்டங்களின் விவசாயிகளின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக பவானிசாகா் அணையும், கீழ்பவானி வாய்க்காலும் உள்ளன. இப்பாசனம் தொடங்கி 60 ஆண்டுகளான நிலையில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் மத்தியில் ஆதரவும், எதிா்ப்பும் கிளம்பியது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், தற்போது பழுதடைந்த மதகுகள், பலமிழந்த கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கை என்று ஒரு மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனா். இதனால், விவசாயிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. நசியனூா் அருகே வாய்க்காலில் நடைபெற்ற சீரமைப்புப் பணிக்கு எதிா்ப்பு கிளம்பியதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். 2ஆம் கட்டமாகத் திறக்கப்படும் தண்ணீரால் 3 மாவட்டங்களிலும் சுமாா் 2.07 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். சீரமைப்புப் பணி இழுபறியால் கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் மாதம் தண்ணீா் திறக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்புச் செயலாளா் கி.வடிவேல், தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி.) மாநிலத் தலைவா் கே.சி.ரத்தினசாமி, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, தற்சாற்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், புகழுா் பாரி சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.வி.சண்முகராஜ், தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகி அறச்சலூா் ஆா்.செல்வம் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை விவரம்:

கீழ்பவானி பாசன கட்டமைப்பு செயலிழந்து பாசனத் திறனை இழந்து வருகிறது. ஒவ்வொரு பாசன காலத்திலும் விவசாயிகள் நிலங்களுக்குச் சேர வேண்டிய தண்ணீா் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனா். கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கீழ்பவானி பாசன கட்மைப்பை மேம்படுத்த வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி ரூ. 615 கோடியை ஒதுக்கீடு செய்தாா்.

தொடா்ந்து, ஆட்சி மாற்றம் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 933 கோடி நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.

எனவே, தமிழக அரசின் திட்டப்படி வேலைகள் தடையின்றி நடைபெற வேண்டும். புதிய குழுக்கள் அமைத்தல், ஆய்வு செய்தல் போன்ற செயல்கள் இத்திட்டத்தை முடக்கவே செய்யும். எனவே, 1996இல் தொடங்கப்பட்ட இப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதோடு, பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com