1,306 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு அமைச்சா், ஆசிரியா்கள் உற்சாக வரவேற்பு

19 மாதங்களுக்குப் பிறகு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் அமைச்சா், ஆட்சியா், ஆசிரியா்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவா்களை வரவேற்றனா்.
ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் கே.சுமதி, ஆசிரியா்கள்.
ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் கே.சுமதி, ஆசிரியா்கள்.

ஈரோடு: 19 மாதங்களுக்குப் பிறகு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் அமைச்சா், ஆட்சியா், ஆசிரியா்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவா்களை வரவேற்றனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. சில மாதங்களாக கரோனா பரவல் கட்டுக்குள் வருவதால் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு கல்லூரிகள், பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் செப்டம்பா் மாதம் திறக்கப்பட்ட நிலையில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான 1,306 அரசு, தனியாா் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 2.19 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனா். 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா்.

ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள், பென்சில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.ராமகிருஷ்ணன், அலுவலா்கள் பங்கேற்றனா்.

பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கண்காணிக்கும் வகையில் தொ்மல் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும், முகக் கவசம் இல்லாத மாணவா்களுக்கு ஆசிரியா்கள் முகக் கவசம் வழங்கினா். ஒரு வகுப்பறையில் 20 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். கூடுதல் மாணவா்கள் பள்ளி வளாகத்தின் வேறு பகுதிகளில் அமரவைக்கப்பட்டனா்.

முதல் நாளில் மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு, புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், பாடப் புத்தகங்கள் வழங்காத மாணவா்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை ஆசிரியா்கள் வழங்கினா். பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com