ஈரோடு மாவட்டத்தில் 976.2 மி.மீட்டர் மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.

ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. 65 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தற்போது பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியது. 2 மணிநேரம் மழைக்கே மாநகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல மழை கொட்டத் தொடங்கியது. நள்ளிரவு 2:30 மணி முதல் 3.30 மணி வரை ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 5 மணி வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட மாநகர் பகுதியில் மட்டும் 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. மாநகர பகுதியில் மட்டும் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம்,  பி.பி. அக்ரஹாரம், ஹவுசிங் போர்டு பகுதி, சூளை , கனிராவுத்தர்குளம் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் இன்று காலை வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளில் கடந்த சில மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. தற்போது மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் ரோடுகள் தோண்டப்பட்டு உள்ளன.  

இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. கருங்கல் பாளையம் ரோடு முழுவதும் மழை நீரால் சேரும் சகதியுமாக காட்சி
அளித்தது. மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் குடிசைப் பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் தூங்காமல் அவதி அடைந்தனர். சிலர் கூட்டுக்குள் இருந்த மழைநீரை பக்கெட்,  குடங்களை கொண்டு வெளியேறி வருகின்றனர். ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்படும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி உள்ளது. 

இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பி.பி. அக்ரஹாரம் ஹவுசிங் போர்டு பகுதிகளிலும் சில வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி உள்ளது.
ஈரோடு வெண்டிபாளையம், ரங்கம்பாளையம் நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் அங்கு  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயிர்கள் நீரில் மூழ்கின. ஈரோடு மாவட்டத்திலேயே அதிக பட்சமாக கவுந்தப்பாடியில் 144.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் 3.30 மணி மணி வரை மழை கொட்டி தீர்த்தது. 

இதனால் கிருஷ்ணாபுரத்தில் ஓடையில் இருந்து மழை வெள்ளம் வெளியேறி சலங்கபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அந்த
பகுதியில் உள்ள 50 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால்   இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அவதி அடைந்தனர்.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வாளி, குடங்கள் மூலம் வெளியேற்றி விடுகின்றனர். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கவுந்தபாடி பகுதியில் 144.2 மி.மீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதேபோல் கொடுமுடி பகுதியில் நள்ளிரவு 2 மணி முதல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. அங்கு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  2  மணி முதல் அதிகாலை 5 மணி வரை மழை கொட்டியது. இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான நெல்கள் நீரில் மூழ்கின. தாளவாடி பகுதியில் இரவு 11 மணி முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதேபோல் அணை பகுதியான கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பவானிசாகர் போது மேலும் பலத்த மழை பெய்தது. 

பெருந்துறை நம்பியூர் சத்தியமங்கலம், அம்மாபேட்டை பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு:- கவுந்தப்பாடி - 144.2, பவானி - 103.6, ஈரோடு - 100, கொடுமுடி - 98.2, பெருந்துறை - 64.2, வரட்டுப்பள்ளம் - 61.2, மொடக்குறிச்சி - 54, குண்டேரிபள்ளம் - 51.6, கோபி - 41.4, நம்பியூர் - 36, கொடிவேரி - 32.2, அம்மாபேட்டை - 30, சத்தியமங்கலம் - 27, தாளவாடி - 18, சென்னிமலை - 11.
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 976.2 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்த உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com