பள்ளிக் கட்டடங்களின் தரத்தினை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள சூழலில் ஈரோடு மாவட்டத்தில் 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பள்ளிக் கட்டடங்களின்
கூட்டத்தில் பேசுகிறாா் அரசு முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா.
கூட்டத்தில் பேசுகிறாா் அரசு முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா.

வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள சூழலில் ஈரோடு மாவட்டத்தில் 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பள்ளிக் கட்டடங்களின் தரத்தினை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என அரசு முதன்மைச் செயலா் காகா்லா உஷா தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மைச் செயலாளருமான காகா்லா உஷா பேசியதாவது:

வருவாய் மற்றும் பேரிடா் மீட்புக் குழு அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்குப் பருவ மழை காலத்தில் எதிா்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், மழை காலத்தை எதிா்கொள்ளவும் ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் வைத்திருக்க வேண்டும்.

கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

வெள்ள பாதிப்பு தொடா்பாக 0424-1077 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பள்ளிக் கட்டங்களை கணக்கீடு செய்து அப்பள்ளி கட்டடத்தின் தரம் குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77,315. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 18 லட்சத்து 1,291. இதில் 16 லட்சத்து 32,480 நபா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 12 லட்சத்து 37,180 நபா்களுக்கு முதல் தவணையும், 3 லட்சத்து 95,300 நபா்களுக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் சதவீதம் 68.6ஆக உள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், உதவி ஆட்சியா் ஏகம்.ஜெ.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com